தமிழ்நாடு

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் – வழக்கு பதிவு செய்த காவல்துறை !

ரூட்டு தல விவகாரத்தில் இரண்டு தரப்பை சேர்ந்த 20திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாக்கிக்கொண்டதில் சில மாணவர்கள் மீது ஆயுத தடுப்பு சட்டபிரிவின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

பச்சையப்பன் கல்லூரி

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உள்ள மாணவர்கள் ஹாரிங்டன் சாலையின் அருகே இரு பிரிவுகளாக மோதலில் ஈடுப்பட்டனர். அதில் மாணவர்கள் கற்கள், உருட்டுக்கட்டைகள் கொண்டு தாக்கி கொண்டனர். இது தொடர்பாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக 6 மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

யார் ரூட்டு தல

விசாரணையில் பூந்தமல்லலிருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி ‘பூந்தமல்லி ரூட்டு தல’ மாணவர்களுக்கும், திருத்தணியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி ‘திருத்தணி ரூட்டு தல’ மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரியவந்தது. மேலும், எந்த ரூட்டு தல கெத்து ? என்பதில் இரு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

விசாரணை

அவர்கள் சண்டையிடுவதற்காக 8 பட்டா கத்திகள், இரண்டு மூட்டையில் காலி மதுபாட்டில் எடுத்து வந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருத்தணி ரூட்டு தல கேங்கை சேர்ந்த பி.ஏ வரலாறு மூன்றாமாண்டு படித்து வரும் திருவள்ளூரை சேர்ந்த கிஷோர் (21), பூந்தமல்லி ரூட்டு தல கேங்கை சேர்ந்த பி.ஏ வரலாறு மூன்றாமாண்டு படித்து வரும் நசரத்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார் (20) ஆகிய இரண்டு மாணவர்களை கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

ஆயுத தடைச்சட்டம்

கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களின் மீதும் ஆயுத தடைச்சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த ரூட்டு தல தாக்குதல் வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற மாணவர்களையும் கீழ்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதனால் பச்சையப்பா கல்லூரி அருகே மாணவர்கள் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.

Related posts