தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாம் லேதம் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டிம் ராபின்சன் ஒரு ரன்னுடன் நடையை கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய நிக் கெல்லி 21 ரன்களிலும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 20 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதற்கிடையில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்த டெவான் கான்வேவும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 60 ரன்களை சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். இறுதியில் கோல் மெக்கன்ஸி 18 ரன்களையும், ஜோஷ் கிளார்க்சன் 26 ரன்களையும் சேர்த்து ஃபினிஷிங் கொடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறினர். இதில் கானர் எஸ்டர்ஹுய்சன் 8 ரன்களிலும், வியான் முல்டர் 16 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டோனி டி ஜோர்ஸி ஒரு ரன்னிலும், ருபின் ஹெர்மான் 19 ரன்களிலும், ஜேசன் ஸ்மித் 12 ரன்களிலும், தியான் ஃபாரெஸ்டர் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இறுதியில் ஜார்ஜ் லிண்டே அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 33 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க அணி 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் லோக்கி ஃபெர்குசன் மற்றும் பென் சீயர்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் அரைசதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய டெவான் கான்வே ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி மார்ச் 20ஆம் தேதி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

