இருண்ட மாடலில் தினமும் சிறுமிகள் வேட்டையாடப்படுவதாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியின் விளம்பர பிம்பத்தைக் கிழித்தெறிந்துள்ளது.
தொடர்ந்து 2 வயது, 7 வயது, 17 வயது எனத் தினந்தினம் பெண் பிள்ளைகளைக் காமக் கொடூரர்களின் பிடியில் சிக்கவிட்டு, பெற்றோர்கள் கண்ணீர் விடும் வேளையில், சட்டம் ஒழுங்கைச் சரிசெய்வதை விடுத்து முதல்வர் ஸ்டாலின் நாடக விழாக்களையும் நடனத்தையும் ரசித்துக் கொண்டிருப்பது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல மிகுந்த கண்டனத்திற்கும் உரியது.
பெண்களின் பாதுகாப்பைக் காவு வாங்கிவிட்டு, மீண்டுமொருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர மட்டும் கனவு காணும் திமுக அரசு தமிழக மக்களின் கண்ணீராலேயே ஒட்டுமொத்தமாக அழியும்! இது உறுதி!
இவ்வாறு அந்தப் பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

