திரையரங்குகளில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி வெளியிடப்படும் அதிகாலை சிறப்பு காட்சிகளை தடை செய்ய கோரி நபர் ஒருவர் தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசும், காவல்துறையினரும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிகாலை சிறப்பு காட்சி
உலகில் உள்ள எந்த திரையரங்குகளிலும் இல்லாத கூத்தாக தமிழக திரையரங்குகளில் மட்டும் அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்படும். அதிகாலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்த காலம் புரண்டோடி திரையரங்குகளில் வெளியாகும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் எடுக்கும் காலம் மாறிவிட்டது.
விக்னேஷ் கிருஷ்ணாவின் மனு
சென்னை, பொன்னேரியை சேர்ந்த விக்னேஷ் கிருஷ்ணா என்பவர் இது குறித்து உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ‘தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டம், ஒழுங்குமுறை விதிகள், உரிம நிபந்தனைகளின்படி அதிகாலை 1 மணி முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையிடக்கூடாது. ஆனால், இதனை மீறி திரையரங்குகளில் காலை 9 மணிக்கு முன்பாகவே காட்சிகள் திரையிடப்படுகின்றன.
அரசுக்கு வருவாய் இழப்பு
அதிகாலையில் திரையிடப்படும் இந்த காட்சிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்து பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பதோடு மட்டும் இல்லாமல் வரி ஏய்ப்பும் செய்வதால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த சட்டவிரோத சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்
இது சம்பந்தமாக தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் புகாரளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும், சட்டம், விதி மற்றும் உரிம நிபந்தனைகளை மீறி படங்கள் திரையிடப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்’ என விக்னேஷ் கிருஷ்ணா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
விதி மீறல்
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்ரமணியம் மற்றும் ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் சட்டப்படி நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட வேண்டிய நிலையில், விதிகளை மீறி எட்டு காட்சிகள் திரையிடப்படுகிறது என வாதிக்கப்பட்டது.
4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்
அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன் விதி மீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினர். மேலும், ‘இந்த வழக்கு குறித்து தமிழக அரசும் காவல்துறையினரும் 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என கூறி வழக்கை தள்ளிவைத்தனர்.