தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தலை திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கான நிர்வாகிகளின் பதவி காலம் நடப்பாண்டு (2026) மே மாதம் நிறைவடைகிறது. இதனையடுத்து 2026 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறும் எனவும், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க சட்ட விதிமுறைகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். மேலும் தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்கக் கோரி தயாரிப்பாளர் கவுன்சில் உறுப்பினர்களான சீனிவாசன், ரஞ்சித் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சங்கத்தின் சட்ட விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பாளர் சங்கம் தரப்பில், சட்ட விதிகளை பின்பற்றியே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டம் உள்ளிட்ட மற்ற கூட்டங்களிலும் மனுதாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத 5 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு, உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். அதே நேரம் வழக்கு தாக்கல் செய்துள்ளவர்களில் நான்கு பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தியவர் என்ற முறையில், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் கவுன்சில் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி பி. தனபால், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடும் போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், தேர்தல் நடைமுறைகள் துவங்கிய பிறகு தடை விதிக்கக் கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், கடந்த தேர்தலின் போது தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன், இம்முறையும் தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடைமுறை துவங்கியுள்ளது. இந்நிலையில், மற்றொரு தேர்தல் அதிகாரியை நியமிப்பது சரியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

