வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி (பங்களாதேஷ் தேசியவாத கட்சி) பிரம்மாண்ட வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் வங்கதேசத்தின் அடுத்த பிரதமராக அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் அமரப்போவது உறுதியாகியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் வெடித்தது. இதன் விளைவாக, ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டில் இருந்தே வெளியேறினார். அவர் இந்தியாவில் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில்தான், வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (பிப்.12) நடைபெற்றது.
தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி, ஜமாத் இ இஸ்லாமி கட்சி, இளைஞர்கள் புரட்சியில் உருவான என்சிபி ஆகிய கட்சிகள் நேரடியாக இந்த தேர்தலில் மோதின. ஆங்காங்கே சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றாலும் கூட, ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடைபெற்றது. மொத்தம் 55 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து, நேற்று மாலையே வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. இதில், தொடக்கம் முதலே பிஎன்பி கட்சி முன்னிலையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது வரையிலான நிலவரப்படி, மொத்தமுள்ள 300 தொகுதிகளில் பிஎன்பி 177 தொகுதிகளிலும், ஜமாத் இ இஸ்லாமி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 53 இடங்களிலும், என்சிபி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக, இளைஞர்களின் புரட்சியில் உருவான என்சிபி கட்சியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், அக்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இன்னும் சில மணிநேரங்களில் முழு தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எனினும், பிஎன்பி கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் தான் போட்டியிட்ட டாக்கா 17 தொகுதியில் 2,16,284 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் அபிதூர் ரஹ்மான் 1,18,658 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் வங்கதேசத்தின் புதிய பிரதரமாக தாரிக் ரஹ்மான் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த தாரிக் ரஹ்மான்?
வங்கதேசத்தின் புதிய பிரதமராக உருவெடுத்துள்ள தாரிக் ரஹ்மான் (60), முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் ஆவார். 2007-இல் ஊழல் புகாரில் ரஹ்மான் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
தொடர்ந்து, உடல்நலக்குறைவு காரணமாக வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ரஹ்மான், லண்டனில் வசித்து வந்தார். சுமார் 17 ஆண்டுகாலம் லண்டனில் இருந்த அவர், கடந்த 2025ஆண்டு டிசம்பர் மாதம்தான் வங்கதேசம் திரும்பினார். ரஹ்மான் திரும்பிய சில நாட்களிலேயே அவரது தாயார் கலிதா ஜியா இறந்தததால், கட்சியின் தலைமை பொறுப்பை அவர் ஏற்றார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற 3 மாதங்களிலேயே, பிஎன்பி-ஐ வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் தாரிக் ரஹ்மான்.

