ஆன்மீகம்

சன்மார்க்க சமத்துவம் போதித்த சமய புரட்சியாளர் – வள்ளலார்!

எத்தனையோ மகான்கள் அவதரித்த இப்புனித மண்ணில் வியக்கத்தக்க மகான் வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள். சித்தர்கள் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர்.இறைவன் ஒளிமயமானவன் என்கிற பேருண்மையை உலகுக்குணர்த்தியவர் அவர். சீவகாருண்ய ஒழுக்கத் தோடு அன்னதான சிறப்பையும் மக்களுக்கு வலியுறுத்தி யிருக்கிறார் சுவாமிகள்.

சிதம்பரத்துக்கு வடக்கே பத்துக் கல் தொலைவில் உள்ள மருதூர் என்னும் சிற்றூரில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 இல் இராமலிங்கர் அவதரித்தார். தந்தை இராமையாபிள்ளை, தாய் சின்னம்மை. குடும் பத்தில் மூத்தபிள்ளை சபாபதி. அடுத்துப் பிறந்தவர்கள் பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமுலை ஆகியோர்

இராமையா கணக்கராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். இராமலிங்கர் பிறந்த கொஞ்ச நாளிலேயே தந்தை காலமானார். குடும்பம் வறுமையில் சிக்கியது.ஆதரவற்ற சின்னம்மை குழந்தைகளுடன் சென்னை அருகிலுள்ள பொன்னேரிக்குச் சென்றார். அங்கே அவருடைய தாய்வீடு இருந்தது. பிறகு பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு சென்னையில் குடியேறினார்கள்.

மூத்த பிள்ளை சபாபதி தமிழ் பயின்று ஆசிரியரானார். பிள்ளைகளுக்கு வீட்டில் வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தும், வெளியிடங்களில் புராணச் சொற்பொழிவுகள் செய்தும் பொருள் தேடினார் அவர். போதிய வருமானம் வந்ததால் குடும்பம் நல்ல நிலையை அடைந்தது.

இராமலிங்கரோ பள்ளிக்குச் சென்று கல்வி பயில் வதில் நாட்டம் கொள்ளவில்லை. கந்தகோட்டத்தில் முருகனைச் சேவித்துப் பாடல்கள் பாடத் தொடங்கினார்.பாடம் புகட்டும் ஆசான் மாணவரின் ஆன்ம வளர்ச்சி கண்டு வியந்தார். அதே சமயம் அவருக்கு மேலும் பாடம் நடத்த மறுத்துவிட்டார்.தம்பியின் போக்கில் அண்ணன் சபாபதி சினமடைந்தார். அவரை வீட்டில் சேர்ப்பதோ, உணவளிப்பதோ கூடாது என்று தடை விதித்தார். ஆனால் அண்ணனுக்குத் தெரியாமல் அண்ணியார் அவருக்கு உணவளிப்பார்.

ஒரு கட்டத்தில் அண்ணியின் வேண்டுகோளுக்கிணங்கி இராமலிங்கர் வீட்டுக்குத் திரும்பியதோடு படிப்பைத் தொடரவும் செய்தார்.அப்போது அவருக்கு வயது ஒன்பது. படிப்பதற்காக நூல்களையும், எழுது பொருள் களையும் பெற்றுக்கொண்டு தமது அறைக்குள் நுழைவார்.

அறைக்குள்ளிருந்த கண்ணாடி முன் அமர்ந்து தியானம் செய்வார். மடை திறந்த வெள்ளமாய் அவருக்குள்ளிருந்து பாடல்கள் வெளிப்படும். அதில் ஆச்சரியப் பட என்ன இருக்கிறது, இறைவனின் அருட்குழந்தை யாயிற்றே அவர்!

சிவயோகி ஒருவர் அளித்த திருநீற்றை உண்டமையால் சின்னம்மைக்கு அருளே வடிவமாய் பிறந்த குழந்தை இராமலிங்கர்.திருநீறளித்த யோகி, ‘தாயே உங்களுக்கு அருட்செல் வன் பிறப்பான். அவன் கருணைமிக்கவனாய் விளங்கு வான்’ என்று ஆசீர்வதித்துச் சென்றார். அந்த ஆசியின் பலனோ என்னவோ சிறுவயதிலேயே அவருக்குத் தமிழ்ப் புலமை ஏற்பட்டிருந்தது.

வீட்டிலேயே தனியறையில் கண்ணாடி வைத்து தீப ஒளியில், கற்பூரச் சுடரில் இறைவனை வணங்கி வந்தார் இராமலிங்கம்.

முருகன் புகழ் கூறும் ‘தெய்வமணிமாலை யே அவர் பாடிய முதல் நூல். அவர் பாடிய மொத்தப் பாடல்கள் நாற்பதாயிரம். அவற்றை அவருடைய பிரதான சீடர் தொழுவூர் வேலாயுத முதலியார் தொகுத்துப் பதிப்பித்தார்.

திருவொற்றியூர் தியாகேசப் பெருமானிடம் இராம லிங்கர் ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி கோயிலிலேயே தியானத்தில் மூழ்கிவிடுவார்.

ஒரு முறை வீட்டுத் திண்ணையில் பசியோடு வருந்திய இராமலிங்கரின் பசி தீர்க்க வடிவுடையம்மையே நேரில் வந்தார். அது அகால நேரம் இராமலிங்கரின் தமக்கையார் உருவில் வந்த அம்மை அவருக்கு உணவளித்துச் சென்றார்.
இராமலிங்கரை மலை வாழ்க்கையில் ஈடுபடுத்த விரும்பிய தமையனார் தனம்மாள் என்கிற உறவுக்காரப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து வைத்தார் ஆனால், இராமலிங்கரோ தாம்பத்தியத்தில் பட வில்லை.

அவர் இல்லறத்துறவியாகவே இருந்து வந்தார் வெள்ளை ஆடையே உடுத்தினார். ஆடம்பரங்களை அறவே வெறுத்தார்.சமத்துவம், கல்வி, தியான யோகம் இவற்றை வலியுறுத்தினார். உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்தினார். சன் மார்க்க சங்கம், சத்திய ஞானசயை, அறக் கூழ்ச்சாலை என்று அவர் தோற்றுவித்த ஆன்மிகப் பணிகள் இன்றும் வடலூரில் நடந்து வருகின்றன.

1874-ல் கருங்குழியை அடுத்த மேட்டுக்குப்பத்தில் தாம் எப்போதும் சமாதி கூடும் அறைக்குள் புகுந்து, சில காலம் திறந்து பார்க்க்க வேண்டாமெனச் சீடர்களுக்குக் கூறி தாழிட்டுக் கொண்டார். அதன் பின் அவர் காணப்படவில்லை. அவ்வறை இன்னும் பூட்டப்பட்டே உள்ளது.தண்ணீரில் விளக்கெரித்தது போல் சித்துக்கள் பலவும் செய்த இராமலிங்கர் 3.1.1874 வெள்ளி இரவு வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் சொருப சமாதியானார்.

அவர் கடவுளோடு ஐக்கியமாகி விட்டார் என்று அவர் மீது நம்பிக்கையுடையோர் கருதுகின்றனர். சமய மறுமலர்ச்சி இப்போதும் உண்டாகலாம் என்பதற்கு இவரது வரலாறே சிறந்த எடுத்து காட்டாகும்.

Related posts