கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் ஒரு ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ) உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகர் 4வது தெருவை சேர்ந்த ஆதி (எ) ஆதிகேசவன். பிரபல ரவுடியான இவர் மீது பல கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவியை பார்ப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி, ஆதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
பின்னர், மனைவியை பார்த்து பேசிவிட்டு, மருத்துவமனையின் பின்புறம் ஆதி பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்தபடி கையில் அரிவாளுடன் வந்த மர்மநபர்கள், ஆதியை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
பட்டப்பகலில் அதுவும் மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கீழ்பாக்கம் போலீசார், ரவுடி ஆதியை கொலை செய்ததாக 9 பேரை கைது செய்தனர்.
இது ஒருபுறம் இருக்க, இந்த கொலை சம்பவம் அரங்கேறிய போது, அங்கு பணியில் இருந்த மூன்று பெண் காவலர்கள் உட்பட 4 காவலர்களும், ஒரு சிறப்பு காவலர் உதவி ஆய்வாளர் (SSI) கிரிதரன் என மொத்தம் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், உதவி ஆணையர் துரை ஆகியோருக்கு மெமோவும் வழங்கப்பட்டது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கிரிதரன் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு திருநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் கிரிதரன் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு தூங்கப்போவதாக கூறிவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து, அவரது மனைவி வினிதா, அறையின் கதவை தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதனால் பயந்து போன வினிதா, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன்பேரில், அங்கு வந்த அவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கிரிதரன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், கிரிதரனின் உடலை பிரேதப் பரிசோனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பணி ஓய்வுபெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் கிரிதரன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

