‘கே.ஜி.எஃப் 2’ படம் ரெண்ட் திட்டத்தின் கீழ் ஓடிடியில் தற்போது வெளியாகியிருக்கிறது.
கே.ஜி.எஃப்
2018ம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியான படம் ‘கே.ஜி.எஃப்’. கன்னட படமான இது தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானது. அதன்பிறகு வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் 80 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு சுமார் 250 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும், இத்திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி அதிக பார்வையாளர்களையும் பெற்றது.
நான்கு மொழிகள்
இதனையடுத்து ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தார்கள். இதனிடையே கடந்த வருடம் ஜூன் மாதம் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது.
பாக்ஸ் ஆபீஸ் வசூல்
விஜய் நடித்த பீஸ்ட் படத்துடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது ‘கே.ஜி.எஃப் 2’. மேலும், பாக்ஸ் ஆபீஸில் சக்கப்போடு போட்டது. இந்த படம் வெளியான முதல் வாரத்திலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதுவரை 1000 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் படம் பல மாநிலங்களில் இன்னும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால் இத்திரைப்படம் 1,500 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனி கட்டணம்
‘கே.ஜி.எஃப். 3′ படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. மேலும், இந்த படம் 2024ம் ஆண்டு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே ‘கேஜிஎஃப் 2′ படம் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் மக்கள் சற்றும் எதிர்பாராத வகையில் அமேசான் நிறுவனம் ‘கேஜிஎஃப் 2’ படத்தை பார்க்க தனியாக 199 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ரெண்ட் திட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே ப்ரைம்க்கு சந்தா செலுத்தி படம் பார்க்க காத்திருந்த ரசிகர்கள், மேலும் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் ‘இது நியாயமா’ என்று சமுகவலையதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.