ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டம் சோஸ்டியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் வானத்தில் இருந்து பேய் மழை கொட்டியது. இதைத்தொடர்ந்து அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 32 பேர் பலியாகினர். மேலும் 90-க்கும் மேற்பட்டோர் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டனர். அவர்களில் 20 பேரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
”திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது” என கிஷ்த்வார் துணை கமிஷனர் பங்கஜ் சர்மா தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சோஸ்டி பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய மேகவெடிப்பு காரணமாக, கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
நிர்வாகம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.