தங்கம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த உலோகங்கள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவருகின்றன.
இதன்படி நாளுக்கு நாள் புதிய உச்சம் என்ற பாணியிலேயே தங்கம் விலை இருக்கிறது.
தங்கம் விலை ஒவ்வொருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு பொருளாகவே மாறிவிட்டது.
ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என இருந்த தங்கம் விலை தற்போது ரூ.97 ஆயிரத்தையும் கடந்து பயணிக்கிறது.
அதிலும் இம்மாதத்தில் மட்டும் விலை கிடுகிடுவென உயர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம் சென்று இருக்கிறது என்று சொன்னாலும் அது மிகையாகாது.
அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2,400-ம் அதிரடியாக ஒரே நாளில் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இம்மாதத்தில் மட்டும் அதாவது கடந்த 1-ந் தேதியில் இருந்து நேற்று வரையிலான கடந்த 17 நாட்களில், தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,250-ம், சவரனுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து இருந்தது.
ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது.
இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,950-க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையாகி வருகிறது.
இந்த தங்கம் விலை சரிவு நகைபிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
வெள்ளி விலை வெள்ளி நேற்று முன்தினம் விலையை காட்டிலும், கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து ஒரு கிராம் ரூ.203-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.13-ம், கிலோவுக்கு ரூ.13,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

