தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஹிட்லரைப் போல சர்வாதிகார தன்மையுடன் நடப்பதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை எனவும் முதல்வர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார் அதிமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற அன்று திமுக தொண்டர் ஒருவரை தாக்கியது, நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 25 நாட்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார் அதிமுகவின் முன்னணி தலைவரான ஜெயக்குமார்.
அவரது கைதினை கண்டித்து தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக போராட்டங்களை நடத்தியிருந்த நிலையில், நேற்றைய தினம் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
அதனைத்தொடர்ந்து இன்று காலை சென்னை புழல் சிறையிலிருந்து வெளிவந்தார் ஜெயக்குமார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குச்சாவடிக்குள் கள்ள ஒட்டு போட முயன்றவரையே பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தேன்.
கள்ள வாக்கு செலுத்த முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மேல் நடவடிக்கை எடுத்து, சிறையிலடைப்பது என்பது மு.க ஸ்டாலினின் சர்வாதிகார தன்மையையே காட்டுகிறது. இதைப் போல எத்தனை நடவடிக்கைகளை எடுத்தாலும் அதிமுகவினை வீழ்த்திட முடியாது என தெரிவித்துள்ளார்.