சமூகம்வணிகம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட காரணம் என்ன?

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த யூபிஎஸ் வங்கி இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை தற்போது 7 சதவீதமாக குறைத்துள்ளது. இதற்கு முன்னர் இந்த வங்கி வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் இந்தியா 7.7 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று கூறியிருந்தது. ஆனால் இப்போது வளர்ச்சி விகிதத்தில் 70 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்டவை இந்தியாவுக்கான வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்திருந்த நிலையில், தற்போது சுவிஸ் வங்கியும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இந்தியாவில் விலைவாசி உயர்வு பெரும் பிரச்சனையாக இருந்துவரும் நிலையில், அது பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுப்பதாக இந்த ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, காய்கறி, பால், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து உள்ளன. இதனால் பணவீக்க பிரச்சினையில் இந்தியா இருக்கிறது. பணவீக்க விகிதம் 6 சதவீதத்தையும் தாண்டியுள்ளதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சினை, கச்சா எண்ணெய் விலையேற்றம், கொரோனா பாதிப்பு போன்ற காரணங்களால் இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் சாமானிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் வங்கி தனது ஆய்வில் தெரிவித்து உள்ளது.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த ஆண்டில் இந்தியாவில் பணவீக்க விகிதம் சற்று அதிகமாக, 5.7 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டு இருந்தது. அதேபோல, பொருளாதார வளர்ச்சி 7.2 முதல் 7.8 சதவீதம் வரையில் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

Related posts