பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.
பட்டியல் வெளியீடு
சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்க அலுவலகத்தில் 1,58,157 பேருக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். வரும் 20ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவர்கள் http://tneaonline.org இணையதளத்தில் தரவரிசைப் பட்டியலை அறிந்து கொண்டு பங்கேற்க்கவும். இதில், வரும் 20 முதல் 23ம் தேதி வரை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுப் பிரிவு, சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 22,587 மாணவர்கள் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர். விளையாட்டுப் பிரிவில் 1,258, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் 970, மாற்றுத் திறனாளிகள் 203 பேரும் தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர். தரவரிசைப் பட்டியலில் பெயர் குறைகள் இருந்தால், இன்று முதல் வரும் 19ம் தேதிக்குள் இலவச சேவை மையத்தில் குறைகளை பதிவு செய்யலாம். குறைகளில் உறுதி இருப்பின், உடனடியாக சரி செய்யப்படும்.

