டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கருணைக் கொலைக்கான சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ் ராணா உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த ஹரிஷ் ராணா கருணைக் கொலை மூலம் உயிரிழந்தார். 13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்ச நிதீமன்றம் அனுமதியளித்ததைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த உயிர் காக்கும் மருத்துவ உதவிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு அவர் இன்று (மார்ச் 24) 11 ஆம் நாளில் அமைதியான முறையில் உயிரிழந்தார். மார்ச் 14 ஆம் தேதி அவர் கருணைக் கொலை சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். நாட்டிலேயே ஒருவரை கருணைக் கொலைச் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து, அது நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஹரிஷ் ராணாவின் பெற்றோர்கள் சட்டப் போராட்டம் நடத்தி அவருக்கான இந்த அமைதியான இறப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். அதாவது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஹரிஷ் ராணாவின் இறப்பு செயல்முறையை வலியற்றதாகவும், இயல்பான ஒன்றாகவும் மாற்றி அவரை இந்த உலகைவிட்டு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
ஹரிஷ் ராணா 2013 ஆம் ஆண்டில் இருந்து கோமாவில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அவர் படித்துக் கொண்டிருந்தபோது விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சுயநினைவை இழந்தார். மருத்துவமனையில் ஹரிஷ் ராணாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு தனியார் மருத்துவமனையில் வைத்து உயிர் வாழ்வதற்கான சிகிச்சைகளை ஹரிஷ் ராணாவின் குடும்பத்தினர் மேற்கொண்டனர். மாதம் ஒன்றிற்கு ரூ. 24 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்து ராணாவின் மருத்துவம் மற்றும் பராமரிப்பு செலவுகளைப் பார்த்து வந்திருக்கின்றனர்.
ஆனால், ஹரிஷ் ராணாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குடும்பத்தினர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே, கடந்த 2018 ஆம் ஆண்டில் ஹரிஷ் ராணாவைக் கருணைக் கொலைச் செய்ய அவரது குடும்பம் உச்சநீதிமன்றத்தை நாடியது.
ஆனால், மருத்துவ உதவிகள் மூலம் ஹரிஷ் ராணாவின் உயிர் காக்கப்பட்டு வருவதாகக் கூறி அந்த கருணைக் கொலை மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிலையிலேயே, ஹரிஷ் ராணா குணமடைவதற்கான எந்தவொரு சிறிய வாய்ப்பும் இல்லை என்பதை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களின் அறிக்கை உறுதிப்படுத்தியது.
இதைத் தொடர்ந்தே, ஹரிஷ் ராணாவைக் கருணைக் கொலைச் செய்வதற்கான மனு ஏற்கப்பட்டு அது தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
ஹரிஷ் ராணாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரின் பெற்றோர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகையால், இறப்பிற்கு பின்னர் பலரை ஹரிஷ் ராணா உயிர் வாழ வைக்கப் போகிறார்.

