“ஜி.கே.மூப்பனாரை பிரதமராகவிடாமல் தடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர்.ராஜு, “கடந்த ஐந்தாண்டுகளில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி நடத்தி இருந்தால் ஏன் இத்தனை கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றனர். திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. ஜிஎஸ்டி அறிவிப்புக்கு பின்னர் தமிழ்நாட்டின் 500- க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நான்காண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரிகளில் கொண்டு வரப்பட்டன.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூட கொடுக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொடுத்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியைச் சேரும். தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை. அரசியலுக்காக இவர்கள் பேசுகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் திமுகவைப் புறக்கணிக்கப் போகிறார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.மூப்பனார் பிரதமர் ஆவதைத் தடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தமிழர் பிரதமராக வருவதை விரும்பாமல் அதைக் கெடுத்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராஜருக்கு பின்னர் அந்தப் பெருமை ஜி.கே.மூப்பனாரை சாரும்.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சுயநலத்தோடு உள்ளன. அதிமுக கூட்டணி உள்ள கட்சிகள் பொதுநலத்தோடு உள்ளன. அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். மருத்துவமனை 24 மணி நேரம் செயல்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுகிறது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் லட்சம் லட்சமாக கொட்டிக் கொடுத்தாலும் உதயசூரியனுக்கு ஓட்டுப்போட மக்கள் தயாராக இல்லை.
அதிமுக கூட்டணி, கொள்கை கூட்டணி. திமுக கூட்டணி, கொள்ளை கூட்டணி. மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்திற்கு குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, விளாத்திகுளம் அருகே 12- ஆம் வகுப்பு மாணவி கொலைச் செய்யப்பட்ட நிலையில் மூன்று நாட்களுக்கு பிறகு அவரது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றுள்ளார்” என்று விமர்சித்துள்ளார்.

