சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
புதிய மெட்ரோ நிலையம்
சென்னை: கலங்கரையில் இருந்து பூந்தமல்லி வரை புதிய மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காந்தி சிலை பின்புறம் ஒரு சுரங்கம் அமைத்து அதில் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம் வரபோகிறது. இதனால் அருகில் உள்ள காந்தி சிலை சேதமடைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த சேதத்தை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக அரசு நடவடிக்கை
முதல் கட்ட நடவடிக்கையாக மெரினாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு ஆலோசித்து வந்தது. மேலும், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இதைபற்றி கூறும்போது: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை பின்புறம், மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க போகிறோம். அதற்கான சுரங்கப்பாதை பணிகள் சில நாட்களில் நடைபெற உள்ளது. இந்தப் பணிகளின்போது, சிலை சேதமடையாமல் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலையை இடமாற்ற முடிவு செய்துள்ளோம்.
சுமார் 26 கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 27 மெட்ரோ ரயில்நிலையங்கள் அமைக்க இருக்கிறார்கள். குறிப்பாக சென்னை கலங்கரையில் இருந்து கோடம்பாக்கம் வரை 9 சுரங்க வழி ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட ரயில்நிலையங்களும் வரவிருக்கிறது. மேலும் இதற்கான தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காந்தி சிலை
சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மெரினாவில் உள்ள காந்தி சிலை இருந்து வருகிறது. 1959ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த சிலை சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக மெரினாவில் இருக்கிறது. ஆனால் அந்த பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடக்கவிருக்கிறது. அதனால் அந்த காந்தி சிலையானது தற்காலிகமாக சென்னையின் புகழ்பெற்ற ரிப்பன் மாளிகையில் நுழைவு வாயிலில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெட்ரோ பணிகள்
போரூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் ஏற்கனவே மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கிவிட்டது. இருப்பினும் இன்னும் பல பகுதிகளில் பணிகள் தொடங்கப்படாத நிலையில் இந்த மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணிகள் முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.
மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தப்பின் மீண்டும் மெரினா கடற்கரைக்கு காந்தி சிலை மாற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.