விவசாயி கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் உட்பட 7 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் பெரியசெங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனுசாமி(48).
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், இருசப்பன் ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பான முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், 2014 மே 17-ம் தேதி இவர்களிடையே நிலம் தொடர்பாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது, பெருமாள், இருசப்பனுக்கு ஆதரவாக செங்காடு கிராமத்தைச் சேர்ந்த மதியழகன்(35), நந்தகோபால்(29), சுதாகர்(35), துரைமுருகன்(39) மற்றும் வந்த வாசி திமுக முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் ஆகியோரும் சேர்ந்து, முனுசாமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில், முனுசாமி, அவரது மனைவி பொன்னி, உறவினர் அஞ்சலி ஆகியோரை, பெருமாள், இருசப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 7 பேர் சேர்ந்து கத்தி உள்ளிட்டவற்றால் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த முனுசாமி செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்ட முனுசாமி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதுகுறித்து அனக்காவூர் போலீஸார் விசாரணை நடத்தி, மதியழகன், நந்தகோபால், இருசப்பன், பெருமாள், சுதாகர், துரை முருகன், முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன் ஆகியோரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ப.மதுசூதனன், குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் எம்எல்ஏகமலக்கண்ணன் மற்றும் பெருமாள், இருசப்பன், மதியழகன், நந்தகோபால், சுதாகர், துரைமுருகன் ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
2009-ல் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கமலக்கண்ணன் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

