Editor's Picksவிளையாட்டு

மைதானத்திற்குள் நுழைந்த கோலி ரசிகர்கள் ; வழக்கு பதிவு செய்தது காவல்துறை!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி நிர்ணயித்துள்ள 447 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.


செல்பி கொடுத்த கோலி
நீண்ட நாட்களுக்கு பிறகு 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால் நேற்றைய தினம் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று மைதானத்திற்குள் நிகழ்ந்தது. இலங்கை அணியின் இன்னிங்ஸின் போது குசால் மெண்டீஸுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட, அச்சமயத்தில் 4 ரசிகர்கள் களத்திற்கு உள்ளே எகிறி குதித்து நுழைந்தனர்.

அங்கிருந்த காவலர்கள் அவர்களை துரத்தி பிடித்தபோது அவர்கள் விராட்கோலியின் தீவிர ரசிகர்கள் என்பது தெரியவந்தது. காவலர்கள் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது கோலி அவர்களை அழைத்து செல்பி எடுத்துக்கொண்டதுடன் அவர்களை விட்டுவிடுமாறும் காவலர்களிடம் கூறியுள்ளார். கோலியின் இந்த செயல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தன் மீதுள்ள அன்பால் விதிமுறைகளை மீறி உள்ளே வந்த ரசிகர்களை கோலியே எந்தவித கோபமும் இன்றி செல்பி எடுத்துக்கொண்டு திருப்பி அனுப்பிவைத்த நிலையில், விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த கோலி ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.