ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஒருவர், யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அத்தனை மேலூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை (70). இவர் அத்தியூர் வனப்பகுதியில் நாள்தோறும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, பின்னர் மாலையில் வீடு திரும்புவது வழக்கம். அந்த வகையில், நேற்று அண்ணாமலை ஆடு, மாடு தீவனத்திற்காக இலை, தழைகளை எடுக்க சென்றுள்ளார். எனினும் அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், வனப்பகுதிக்கு சென்று தேடினர்.
அப்போது, அண்ணாமலை யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், அண்ணாமலையின் உடலை கைப்பற்றினர். அத்துடன், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரளவாடி கிராமத்தில் ஜேம்ஸ் என்பவரது தோட்டத்தில் 5- க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்தன. அந்த யானைகளை விரட்டும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த போது,மகேஷ் (28) என்ற இளைஞரை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, பயிர்களை காப்பதற்காக தோட்டத்தை சுற்றிலும் விவசாயிகள் அமைத்துள்ள மின்வேலியில் சிக்கியும் சில யானைகள் உயிரிழந்துள்ளன. யானைகள் விவசாய நிலத்திற்கு புகுவதைத் தடுக்கும் வகையிலும், மனித உயிர் இழப்புகளை தடுக்கும் விதமாகவும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாளவாடி மலைப்பகுதி மக்களிடம் கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே, இரவு நேரங்களில் காட்டுப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், பகல் நேரங்களில் ஆடு மேய்ச்சலுக்கு செல்லும் போது குழுவாக செல்ல வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

