மதுக்கரை அருகே 14 மாத குட்டியுடன் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் பகுதியில் கடந்த மாதம் 25ம் தேதியன்று விவசாய நிலத்தில் இருந்த சேற்றில் சுமார் 50 வயதான ஒரு பெண் காட்டு யானை சிக்கி தவித்தது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற மதுக்கரை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கிரைன் மூலம் காட்டு யானையை சேற்றில் இருந்து மீட்டனர்.
பின்னர் அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதில் அந்த யானையின் உடல்நிலை தேறியதை தொடர்ந்து, கடந்த 26ஆம் தேதியன்று அந்த யானையை வனப்பகுதியில் விடுவித்தனர். இதையடுத்து அந்த யானை அய்யாசாமி கோயில் வனப்பகுதிக்குள் சென்றது.
இந்த நிலையில், எட்டிமடை அருகேயுள்ள திமில் மலை வனப்பகுதிக்கு அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மதுக்கரை வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வயதான பெண் காட்டு யானை உயிரிழந்து கிடந்ததை கண்டனர். உடனே இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.
அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் யானையின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே யானையின் உடலை வனத்துறையினர் பிரேதப் சோதனை செய்த போது, அதன் உடலில் எவ்வித வெளிகாயங்களும் இல்லை என்பதும், உயிரிழந்த யானை கடந்த வாரம் சேற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண் யானை என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையிலான வன மருத்துவர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் முன்னிலையில் யானையின் உடலை உடற்கூராய்வு செய்தனர். அப்போது அந்த யானையின் வயிற்றில் 14 மாத பெண் குட்டி உயிரிழந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், உடல் உள்ளுறுப்புகள் செயலிழப்பு காரணமாக காட்டு யானை உயிரிழந்து இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து யானை உயிரிழப்பிற்கான முழுமையான காரணம் கண்டறிய உடற்கூராய்வு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ”உயிரிழந்த யானைக்கு சுமார் 50 வயது இருக்கும். யானையின் உடல் உள்ளுறுப்புகள் முற்றிலும் செயல் இழந்துள்ளது. பிரேதப் பரிசோதனையின் போது தான் யானை கருவுற்றிருந்தது தெரிய வந்தது. கடந்த வாரம் சேற்றில் சிக்கிய யானை மீட்கப்பட்டு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. ஒரு வார காலமாக நல்ல நிலையில் சுற்றி வந்த இந்த யானை உள்ளுறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் அதன் தாடைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. யானையின் உடல் உள்ளுறுப்புகள் சேகரிக்கப்பட்டு அதன் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவில்தான் யானை உயிரிழப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும்” என்றார்.
கருவில் இருந்த குட்டியுடன் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

