பணி நேர விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தியும், பணி ஓய்வு இடைவேளை வழங்க வலியுறுத்தியும், டெல்லியில் ரயில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில்வே வாரிய விதிகளின், ரயில் ஓட்டுநர்களுக்கு அவர்கள் பணிபுரியும் தலைமையகத்தில் 16 மணி நேரமும், வெளியூர்களில் 8 மணி நேரமும் ஓய்வு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு 8 மணி நேர வேலை உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், போதிய ஓய்வின்றி வேலை செய்வதாக ரயில் ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் பணி நேர விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று ரயில்வே துறையிடம் வலியுறுத்தி வரும் ரயில் ஓட்டுநர்கள், டெல்லி ஜந்தர் மந்தரில் இரண்டு நாட்களாக (மார்ச் 27, 28 ) போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து, சசி ரஞ்சன் குமார் என்ற ரயில் ஓட்டுநர் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்கிறோம். பணி முடிந்த பிறகும் எங்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில்லை. பணி நேர விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால், ரயில்வே துறை மீது எங்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது” என்றார்.
ரயில் ஓட்டுநர்களுக்கு குறிப்பிட்ட பணி நேரம், ஓய்வு இடைவேளை அளிக்கப்பட வேண்டும் என்று ரயில்வே வாரியம் கூறியுள்ள போதிலும், நடைமுறையில் அவ்வாறு இல்லை. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, 14 மணி நேரம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக பல ரயில் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், தங்களுடையை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், நீண்ட கால போராட்டத்திற்கு தயாராகி வருவதாக ரயில் ஓட்டுநர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மற்றொரு ரயில் ஓட்டுநரான கே.பி.வர்கீஸ் கூறுகையில், “எங்களுடைய நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதே போல், “போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறோம்” என்று மற்றொரு ரயில் ஓட்டுநர் அஜய் குமாரும் தெரிவித்தார்.
ரயில் ஓட்டுநர்ககளின் போராட்டம் குறித்து குறித்து அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.சி.ஜேம்ஸ் கூறுகையில், “கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து காலி பணியிடங்கள் அதிகரித்து விட்டன. 2024-ல் 17,966 பணியிடங்களையும், 2025-ல் 9,700 பணியிடங்களையும், 2026இல் 10,625 பணியிடங்களையும் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ஆள் சேர்ப்பு பணி மிகவும் மந்தமாக நடைபெறுகிறது. ரயில் ஓட்டுநர்கள் யாரும் புதிதாக சேர்க்கப்படவில்லை.
இதனால் கூடுதலாக 20 முதல் 30 சதவீதம் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விடுமுறையோ, ஓய்வு இடைவேளையோ கிடைப்பதில்லை. எனவே பணிச்சூழல் மனிதாபிமானமற்றதாக மாறிவிட்டது” என்று தெரிவித்தார்.

