கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெகநாத் மிஸ்ராவை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி, அக்கட்சியின் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த முறை 4 முனை போட்டியாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன.
அந்த வகையில், இந்த முறை முதன்முறையாக தேர்தல் களம் காண்கிற தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கழகத் தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்து அறிவித்தார்.
அதன்படி, கம்பம் சட்டமன்ற தொகுதியில் கழக நிர்வாகி ஜெகநாத் மிஸ்ரா என்பவர் போட்டியிடுவதாக விஜய் அறிவித்தார். இந்நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெகநாத் மிஸ்ரா தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர் இல்லை எனவும், தனியாக ஒரு கட்சியை வைத்து நடத்தி வந்தவரை எப்படி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட வைக்கலாம் எனவும் கூறி கம்பம் நகர கழக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கம்பம் தொகுதியில் தவெகவின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த மதுரை மண்டல வழக்கறிஞர் இணை ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் சந்தர் என்பவரைதான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும், தெற்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி தன்னிச்சையாக செயல்பட்டு வேட்பாளரை மாற்றி அறிவிக்க செய்துள்ளார் எனவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
வேட்பாளரை மாற்றி அறிவிக்காவிட்டால் வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய வீதியில் தவெகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
தவெக முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கவுள்ள நிலையில், அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றி அறிவிக்கக்கோரி தவெகவைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது மற்ற கட்சிகளிடையே பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில், நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, கட்சித் தலைவர் விஜய் வேட்பாளரை மாற்றி அறிவிப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

