Monday Special

மர்மம் விலகாத மன்னர்களின் பள்ளத்தாக்கு – தூடன்காமுனின் சாபம் !

பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் படும் வரை, ஒரு எகிப்திய அரசரின் பிணமும், அவருடன் புதைக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷங்களும் வெளியுலகிற்கு தெரியாமல், பல இயற்க்கை சீற்றங்கள் காரணமாக புதையுண்டு கிடந்தன. பண்டைய எகிப்து மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் கலாச்சாரம்,பிணங்களை பதப்படுத்தும் முறைகள் என அனைத்தின் மீதும் அதுவரை இருந்த கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டுமென்றால், காலத்தால் மறக்கடிக்கப்பட்ட அந்த அரசரின் கல்லறையை தேடி கண்டுபிடிப்பது தான் ஒரே வழியென அறிந்துகொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த கல்லறையை தேடி புறப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த கல்லறையும் கண்டுபிடிக்க பட்டது. அந்த அரசரின் பிணத்தை தோண்டி எடுத்ததும் அவர்களின் கேள்விகளுக்கு விடையை மட்டும் வெளிக்கொணரவில்லை, கூடவே ஒரு சாபத்தாயும் கட்டவிழ்த்துவிட்டனர்.
ஆம்!!! நூற்றாண்டுகளுக்கு முன் உருவான சாபம், அடுத்தடுத்து பல மரணங்களை ஏற்படுத்தியது. யார் அந்த அரசன் ? அது என்ன சாபம்? வாருங்கள் பார்க்கலாம்.

பழங்கால நாகரிகங்களிலேயே மர்மமானதும் விளங்கமுடியாத ரகசியங்களை உள்ளடக்கியதுமான நாகரிகம் எகிப்திய நாகரிகம் தான். இன்று வரை பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் நம்மை சிந்தனையிலேடியே ஆழ்ந்துகிடக்க செய்வது இந்த நாகரிகத்தின் தொன்மையை பறைசாற்றுகிறது. எகிப்து மக்களின் வாழ்க்கை முறையும் வித்தியாசமானதாகவே இருந்துள்ளது. அவர்களின் உடை, உணவு, மொழி என எல்லாமே வித்தியாசமானவை. இறந்த பின் உடல்களை mummification எனப்படும் பதப்படுத்தும் முறையை மேற்கொண்டு பிணங்களை பதப்படுத்தி புதைத்தனர். இறந்த பின்பும் அவர்கள் உயிர்வாழ்வதாக கருதினர். சாமானியர் இறந்தால், அடுத்த நாள் தேவைக்கான உணவை மட்டும் உடன் வைத்து புதைத்தனர். அரச குடும்பத்தை சேர்ந்தவர் இறந்தால், அவர் பயன்படுத்திய பொருட்களை உடன் வைத்து புதைத்தனர். அரசரே இறந்தால், விலைமதிப்பற்ற ஆபரணங்கள், பொக்கிஷங்கள், வைர வைடூரியங்கள் என அனைத்தையும் வைத்து பிரமிட் எனும் முக்கோண வடிவிலான கல்லறையும் எழுப்பி விடுவர். பண்டைய எகிப்து மக்கள், மன்னர்களை கடவுளின் தூதுவர்களாக பார்த்தனர், எனவே மன்னர்களை கடவுளுக்கு நிகராகவே கருதிவந்தனர். மன்னர்களின் கல்லறைகள் இருந்த பகுதியை மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of Kings ) என்று அழைத்தனர். இந்த பள்ளத்தாக்கில் தான் அந்த அரசரின் கல்லறையும் கண்டுபிடிக்கப்பட்டது.

எகிப்தியர்கள் தங்கள் அரசர்களை பாரோ (Pharaoh) என்று அழைப்பார்கள். 18 ஆவது எகிப்திய ராஜவம்சத்தை சேர்ந்த 12 ஆவது மன்னரான தூடன்காமுன் (Tutankhamun ) என்பவரின் கல்லறையை தான்
1922 ல் அகழ்ந்தெடுத்தனர். அகழாய்வு வெற்றிகரமாக நடைபெற்றதற்கான பார்ட்டியும் கொண்டாடப்பட்டது.

ஆனால் சில நாட்களுக்கு பிறகு எல்லா கொண்டாட்டங்களும் தலைகீழாக மாறப்போவதை அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.

எட்டு வயதில் அரியணை ஏறியஇந்த இளம் அரசன், தன்னுடைய குதிரை வண்டியில் நகர்வலம் செல்லுகையில் நிகழ்ந்த விபத்தால், காலில் முறிவு ஏற்பட்டு சிறிது காலம் நடக்க முடியாமல் இருந்தார். இந்த முறிவே நாளடைவில் நோய்த்தொற்றாக மாறி, அவரது உயிரை மாய்த்தது. நல்லாட்சி நல்கிய இந்த மன்னனின் பெயர் வரலாற்றில் இடம்பெறாதவாறு உடனிருந்த சூழ்ச்சியாளர்கள் சாதி செய்தனர். மன்னர்கள் புதைக்கப்படும் பள்ளத்தாக்கில், ஒரு சாமானியனை போல எந்த விதமான அலங்காரமும் இல்லாமல் புதைக்கப்பட்டான் தூடன்காமுன். அவனது கல்லறையின் மீது ஒரு சாபமும் விடப்பட்டது. இந்த கல்லறையை திறப்பவர்கள் சீக்கிரமே மரணத்தை நெருங்குவார்கள் என சபிக்கப்பட்டு பின் புதைக்கப்பட்டான்.

நூற்றாண்டுகள் உருண்டோடின, 1922 நவம்பர் 4 ஆம் நாள், பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த மன்னனின் கல்லறையை தோண்டி எடுத்து திறந்தனர். அதன் பின் நடந்ததோ வேறு.

ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர் (Howard Carter ) மற்றும் அவரது தலைமையிலான குழுவினர் சிலர் தான் இந்த மன்னனின் கல்லறையை கண்டுபிடித்த பெருமைக்கு சொந்தக்காரர்கள். இந்த குழுவை சேர்ந்த பலரும், ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் இறக்கட்டத்தொடங்கினர். இந்த அகழ்வாய்வுக்கு அனுமதியளித்த எகிப்து இளவரசர் தன் மனைவியின் கையாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார்.
தோடி எடுக்கப்பட்ட மன்னரின் உடலை ஸ்கேன் செய்த Sir Archibald Douglas Reid என்பவரும் அதே ஆண்டு இறந்து போனார். ஓராண்டு கழித்து சூடான் நாடு கவர்னர் ஜெனரல் , எகிப்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார், அவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். கார்ட்டரின் குழுவில் இருந்த ஒருவர் சில ஆண்டுகள் கழித்து “தவறுதலாக” விஷமருந்தி இறந்துபோனார்.

கார்ட்டரின் உதவியாளராக இருந்த Richard Bethell என்பவர், தன்னுடைய படுக்கையறையில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார்.இதை கண்ட அவரது தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்னும் சில பேருக்கு சாலை விபத்துகள் மூலம் காயம் ஏற்பட்டது, சிலர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார்கள். இறுதியில் குழுவின் தலைவரான ஹோவர்ட் கார்ட்டர் , தனது 64 வயதில் Hodgkin’s disease எனப்படும் நோய் தாக்கி இறந்தார். அவர் இருக்கும்பொழுது உடனிருந்து கணீர் சிந்த யாருமில்லால் தனிமையின் கோரப்பிடியில் சிக்குண்டு மரணத்தை தழுவினார்.
இவையெல்லாம் யதேச்சையாக நடந்த நிகழ்வுகள் என்று கூறி தட்டிக்கழிப்பவர்களும் உண்டு. எது எப்படியோ… மன்னனின் சாபம் முடிந்ததா? இல்லை அது இன்னும் பல உயிரிகளை பலிகேட்டுக்கொண்டிருக்கிறதா ? என்று இன்றளவும் ஆராய்ச்சி செய்பவர்களும் உண்டு. மர்மங்கள் மட்டுமே நிறைந்த எகிப்து நாகரிகம் இன்னும் நிறைய மர்ம முடிச்சுகளை தன்னுள் மறைத்து வைத்துள்ளது. அவற்றை காலம் தான் கட்டவிழ்க்க வேண்டும்.

Related posts