கடந்த 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்றது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம் அளி்ததுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட விஜய் அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.
இதில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மேலும், அடையாள அட்டை வழங்கிய நபர்களுக்கு மட்டுமே விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார், “மக்களுக்கு நேரடியாக பலன் தரக்கூடிய அம்சங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. குறிப்பாக, தமிழக மக்களுக்கு எதிரான பட்ஜெட். அனைத்துமே அறிவிப்பாக உள்ளதே தவிர, வரி குறைப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை.
மூலப்பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் மாறி வரும் சூழலில் மக்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட்டில் மாநிலத்திற்கு உறுதியான நன்மைகளும் இல்லை, மக்கள் நலனுக்கான வழிகாட்டல்களும் இல்லை. ஒட்டுமொத்தமாக, தமிழக வளங்களை திருடக்கூடிய பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது” என குற்றஞ்சாட்டினார்.
கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “தேவையான நேரங்களில் செய்தியாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. செய்தியாளர் சந்திப்பு மட்டுமே ஒரு பெஞ்ச்மார்க் அல்ல, விஜய் மக்களை நேரடியாக சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். மேலும், சுற்றுப்பயணம் தொடர்பாக திட்டமிட்டு வருகிறோம். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அதேபோல, அதிமுக தலைமையில் கூட்டணி செயல்படுகிறது என்றாலும், அனைவரும் NDA கூட்டணி என்று தான் கூறுகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது கூட இதுவரை தெளிவாக அறிவிக்கப்படவில்லை” என்றார்.
மேலும், “கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக விஜய் கருப்பு சிவப்பு சைக்கிளில் சென்றதாக கூறப்படும் தகவல் தவறானது. அந்த குற்றச்சாட்டு அப்போதே மறுக்கப்பட்டுவிட்டது. மேலும், பிற கட்சிகளை போல மக்களை நேரடியாக சந்திக்க எங்களுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படுவதில்லை. சிறிய நிகழ்ச்சிகள் நடத்த கூட தடைகள் கொடுக்கிறார்கள். இந்த சூழ்நிலை விரைவில் மாறும், மக்களை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகும்” என்று நிர்மல்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

