ஐபிஎல் 2026 தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய ஆகாஷ் தீப்-பிற்கு மாற்றாக சௌரப் தூபேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு அணியும் தொடருக்காக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், தொடருக்கு முன்பே சில வீரர்கள் காயம் காரணமாக அடுத்தடுத்து விலகியது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப், சென்னை சூப்பர் கிங்ஸின் நாதன் எல்லிஸ், ராஜஸ்தான் ராயல்ஸின் சாம் கரண், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஜேக் எட்வர்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனை அந்தந்த அணி நிர்வாகங்களும் உறுதி செய்துள்ளன.
இந்த நிலையில் தொடரில் இருந்து விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்வதிலும் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆகாஷ் தீப்-க்கு பதிலாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விதர்பா அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌரப் தூபேவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை 8 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சௌரப் தூபே அதில் மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சௌரப் தூபே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையிலும், அவருக்கு எந்தவொரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சாம் கரணுக்கு மாற்றாக இலங்கை டி20 அணியின் கேப்டன் தசுன் ஷனகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்தும் தசுன் ஷனகா விலகியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, லாகூர் கலந்தர்ஸ் அணி எதிர் வரும் சீசனுக்காக ரூ.2.2 கோடிக்கு ஷனகாவை ஒப்பந்தம் செய்திருந்த நிலையில், தற்சமயம் அவர் தொடரில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாதன் எல்லிஸுக்கு பதிலாக தங்களின் மாற்று வீரரை தேடும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக ஸ்பென்சர் ஜான்சனும் எதிர் வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாட ஸ்பென்சர் ஜான்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் சிஎஸ்கே அணியில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதால், இந்த சீசனில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

