Monday Special

உலகமே உற்று நோக்கிய ரோஸ்வெல் நிகழ்வு

ஜூலை 7 , 1947 . அன்று ஒரு திங்கள் கிழமை இரவு. அமெரிக்க நகரமான ரோஸ்வெல் நகரத்தின் மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு உறங்கச்சென்ற தருணம். நிசப்தம் எங்கும் நிலவியது. ஒரு சில நிமிடங்களுக்குள், உலகையே ஆச்சர்யத்திற்குள் மூழ்கடிக்க செய்யும் ஒரு நிகழ்வு அங்கே நிகழவிருப்பதை அந்த நகரத்து மக்கள் அறிந்திருக்கவில்லை.
அமெரிக்கா முழுவதும் பறக்கும் தட்டுகள் பற்றி பல வதந்திகள் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் அது. நமது பூமியை போலவே வேறு பல கிரகங்கள் இருப்பதாகவும், அங்கே வாழும் வேற்று கிரக வாசிகள், நம் பூமியை அவ்வப்போது வந்து உளவுபார்த்துவிட்டு செல்வதாகும் எண்ணற்ற வதந்திகளும் கட்டுக்கதைகளும் புனையப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டிருந்த காலம்.
வானிலிருந்து ஏதோ ஒரு மர்ம பொருள் நிலத்தில் வந்து விழுந்ததது போல ஒரு சிறிய அதிர்வும், அதை தொடர்ந்து இடி பிடித்ததை போல பலத்த சத்தமும் கேட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரோஸ்வெல் இதையெல்லாம் அறிந்திருக்கவில்லை.
மறுநாள் காலை நியூ மெக்ஸிகோ மாகாணத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த வால்டர் ஹாட் (Walter Haut) ஒரு செய்தியாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். ரோஸ்வெல் நகரின் அருகே உள்ள ஒரு மேய்ச்சல் நிலத்தில் விண்ணிலிருந்து பறந்து வந்த ஒரு பறக்கும் தட்டு விழுந்து நொறுங்கியது என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியறிக்கையை வாசித்தார். அவ்வளவுதான்!!!! அந்த நிமிடம் வரை வெறும் வதந்திகள் என கருதப்பட்ட அனைத்து கதைகளும் உண்மையாக உருமாறிவிட்டது. அனைத்து நாளிதழ்களிலும் இதை பற்றிய செய்திகள் மட்டும் தான். பக்கத்துக்கு பக்கம் பரவசமாக வேற்று கிரக வாசிகள்,பறக்கும் தட்டுகள் என கர்ப்பிணி குதிரையை பறக்க விட்டு எழுதி தள்ளினார்கள் பத்திரிக்கையாளர்கள்.

அதோடு நிற்கவில்லை. ராணுவம், வான்படை ,கப்பல் படை என்று அனைத்து பாதுக்காப்பு படைகளுக்கும் அவசர கதியில் இந்த தகவல் சென்று சேர்ந்தது. வேற்றுகிரக வாசிகளின் தாக்குதல் எந்நேரமும் பூமியின் மீது நிகழ வாய்ப்பிருப்பதாக மக்கள் அஞ்சினர்.

நிகழ்விடத்திற்கு ராணுவ அதிகாரிகள் விரைந்தனர். பெரிய உலோக துண்டுகள்,கூடவே நிறைய ரப்பர் துண்டுகள் என அடையாளம் தெரியாத அளவுக்கு சிதறி கிடந்த மர்மப்பொருளை அந்த அதிகாரிகள் கைப்பற்றினர். பெயருக்கு சில புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பொதுமக்களின் வருகைக்கு முன் அனைத்து ஆதாரங்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.
இத்தனை களேபரங்களும் சில மணி நேரங்களுக்குள் நிகழ்ந்துவிட்டன. ஒரு சிலர் மட்டுமே இதற்கெல்லாம் சாட்சி. இந்த விஷயம் காட்டுத்தீ போல் பரவுவதற்கு முன்பே மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

விழுந்து நொறுங்கியது விண்கலம் அல்ல…வானிலையை கண்காணிக்கும் பலூன் தான் வெடித்து சிதறியது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த பரபரப்பை அடக்க நினைத்தது அமெரிக்க அரசாங்கம்.

சரி…எதற்காக இந்த விஷயத்தை மறைக்க முயல வேண்டும்? வேற்று கிரக வாசிகள் நம் பூமிக்கு வந்தால் எதற்காக வெளியுலகுக்கு அதை தெரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் ? காரணம் இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே வேற்றுகிரக வாசிகள் பற்றி அரசல் புரசலாக பேச்சுக்கள் செய்திகள் ஆங்காங்கே எழுந்தவண்ணம் இருந்தன.
இவ்வளவு ஏன்…19 ஆம் நூற்றாண்டு வரை மெதுவாக நிகழ்ந்து வந்த அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வேகமெடுத்தது. இந்த திடீர் வேகம் என்பது வெறும் மனித முயற்சியினால் மட்டும் ஏற்பட்டது அல்ல…நிச்சயமாக வேற்றுகிரக வாசிகளின் உதவியும் இதில் இருந்திருக்க வேண்டும். ஏன் என்றால், அது வரை பூமியில் மட்டும் பரவி இருந்த அறிவியல் ஆராய்ச்சி என்பது சற்றே ஒரு படி மேலே சென்று வாணி=இயல் ஆராய்ச்சி , வேறு கிரகங்களுக்கு விண்கலங்களை ஏவுதல்,நிலவில் மனிதனை அனுப்புதல் என கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆராய்ச்சிகளும் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இரண்டு உலகப்போர்களை சந்தித்த மனித இனம், பொருளாதார நெருக்கடியிலும் இப்படிப்பட்ட அறிவியல் சாதனைகளை படைத்தது என்று கூறினால் அது நம்பும்படியாக இல்லை. எனவே விஞ்ஞானிகள் ஏதோ ஒரு ரகசியத்தை மறைக்கிறார்கள் என்று சந்தேகம் கொண்ட பலர், அந்த ரகசியம் வேற்றுகிரக வாசிகளாக இருக்கலாம் என்று எண்ணினர்.

பாமர மக்களுக்கு தெரியாமல், உலக நாடுளும், அவைகளின் தலைமையும் வேறு கிரகங்களில் வாழும் ஏலியன்ஸ் (Aliens ) எனப்படும் வேற்றுகிரக வாசிகளிடம் தொடர்புகொண்டு அவர்களின் தொழில்நுட்பத்தை கடன் பெற்றோ திருடியோ தங்கள் நாட்டில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டனர் என்று கூறுகிறார்கள் சதிக்கோட்பாட்டாளர்கள் (Conspiracy Theorists) .

வேற்று கிரக வாசிகள் இருப்பதும்,அவர்கள் பறக்கும் தட்டுகளில் நம் பூமிக்கு வந்து செல்வதும் உண்மை என்று வெளியுலகுக்கு தெரிய வந்தால் மனித இனம் அதுவரை அடைந்த முன்னேற்றத்துக்கும் அறிவியல் தொழில்நுட்ப புரட்சிக்கும் காரணம் வேற்றுகிரக வாசிகள்தானே தவிர மனிதர்கள் அல்ல என்ற செய்தி வரலாற்றில் பதிவாகிவிடும் என்று நினைத்த உலக நாடுகளின் தலைவர்கள் இந்த விஷயத்தை பரம ரகிசயமாக வைத்துக்கொள்ள முடிவெடுத்தனர்.

வேற்றுகிரக வாசிகளின் வரவை எதிர்நோக்கி காத்திருந்த மக்களும் இருந்தனர். ஆம்! வேற்றுகிரக வாசிகள் தான் உண்மையான கடவுளர் என்றும், உலகை படைத்து அதில் மனிதர்களை குடிபுக வைத்தவர்களும் இந்த வேற்றுகிரக வாசிகள் தான் எனவும், அவர்கள் இந்த பூமிக்கு வருகை தந்து தங்களை ஆட்கொண்டு அவர்களின் தாய் கிரகத்துக்கு அழைத்துச்செல்வார்கள் என்று நம்பிக்கிடந்த கூட்டத்தினரும் உண்டு.

1940களின் இறுதியில் நிகழ்ந்த இந்த ரோஸ்வெல் நிகழ்வு சில ஆண்டுகளுக்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டு ஓய்ந்தது. விழுந்து நொறுங்கியது வானிலை பலூன் தான் என்று பலரும் நம்பத்தொடங்கினர். எதிர்பாராத விதமாக 1970 களில் மீண்டும் இந்த ரோஸ்வெல் நிகழ்வு பலருக்கும் நினைவூட்டப்பட்டது. 1940 களில் சிறுவர்களாக இருந்தவர்கள். தங்களுடைய சிறுவயதில் நிகழ்ந்த இந்த நிகழ்வு மீதிருந்த ஆர்வமிகுதியால், பலரும் மறந்திருந்த இந்த சம்பவத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்தனர்.
ஆனால் இம்முறை பல துணைக்கதைகளும் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு விழுந்து நொறுங்கிய பறக்கும் தட்டினை அப்புறப்படுத்தும்போது ஏலியன்களின் உடல்களும் கைப்பற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் கூறினார்கள். அவ்வாறு கைப்பற்றப்பட்ட உடல்களில் ஒரு உடலில் அசைவுகள் தென்பட்டதாகவும் கூறினார்கள்.

இப்படி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளை அடுக்கிக்கொண்டே சென்றவர்கள் , உச்சக்கட்டமாக சொன்ன தகவல் தான் இன்றளவும் அமெரிக்க அரசின் மீது மக்களின் சந்தேக பார்வை மாறாமல் இருக்க காரணமாக அமைந்தது. உயிருடன் மீட்கப்பட்ட ஒரு ஏலியனை ரகசிய இடத்தில் அடைத்துவைத்து அதன் உடலில் பல ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

இந்த தகவலை தொடர்ந்து ஏலியன்களின் புகைப்படங்கள்,காணொளிகள் என்று வரிசையாக பலராலும் தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டது. இந்த ரோஸ்வெல் சம்பவத்தை மையமாக வைத்து பல நாவல்களும் திரைப்படங்களும் வெளியாகின.
வேற்றுகிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளும் அறிவியல் பத்திரிக்கைகளில் வெளிவர தொடங்கின.
இதற்கென்றே பிரத்யேகமான அருங்காட்சியகங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டன.

இன்றளவும் சர்ச்சைக்குட்பட்ட விஷயமாக கருதப்படும் ரோஸ்வெல் நிகழ்வு, முழுவதுமாக நிரூபிக்கப்படாத அதே நேரம் முழுவதுமாக புறந்தள்ள முடியாத ஒரு சாதி கோட்பாடாகவே இருக்கிறது. அமெரிக்க அரசாங்கம், அந்த நாட்டின் மக்களுக்கு தெரியாமல், வேற்றுகிரக வாசிகளை வைத்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருவதாக இன்றும் நம்பி வருகிறார்கள்.

Related posts