‘செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும்போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுகின்றன. முரசொலி மட்டும் படிப்பதனால், குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா?’ என முதல்வர் ஸ்டாலினிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும்போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும், வயது வித்தியாசமின்றி தொடரும் பாலியல் வன்கொடுமைகளும் முதல்வர் ஸ்டாலினின் செவிகளுக்கு எட்டுகிறதா இல்லையா?
தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களால் தமிழக மக்கள் அச்சத்தில் உறக்கத்தை தொலைத்து தவிக்கையில், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது?
முரசொலி மட்டும் படிப்பதனால், குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா? அல்லது தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப்பட்டுவிட்டதா?
மொத்தத்தில், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பறிபோனதை, நிம்மதியாக வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே தமிழகம் பேரழிவில் இருந்து மீட்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை’ எனத் தெரிவித்தார்.

