மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். ராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது டேவிட் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து, படகிலிருந்த கபில் ரோச்சர், ஜான்சன், ஆண்டனி, அந்தோணி அஜித், பிரின்ஸ்ரூபட், ரீகன், அந்தோணி ரூவிஸ்டன், மோசஸ், பிரிஸ்மென், கிளமண்ட், அகர்சன், பெரிய கருப்பன் ஆகிய 12 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட படகையும், 12 பேரையும் இலங்கையிலுள்ள நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு சென்று அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணைக்கு பிறகு 12 பேர் மீதும், எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் நீர்கொழும்பு சிறை யில் அடைக்கப்பட்டனர்.

