நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து, மலைப்பாதையில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நம் அண்டை நாடாளன நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில், மலை உச்சியில் அமைந்துள்ளது மனகாமனா கோயில். புகழ்பெற்ற இந்த கோயிலுக்குச் சென்றால், மனதில் உள்ள விருப்பங்கள் நிறைவேறும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் 14 பேர், ஒரு பேருந்தில் சென்று விட்டு சனிக்கிழமை இரவு திரும்பிக் கொண்டிருந்தனர். மலை உச்சியில் இருந்து திரும்பி வரும்போது ஓரிடத்தில் வளைவில் திரும்பிய பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவல் துறையினரும் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் 7 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதுதவிர 7 இந்திய பக்தர்களும், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் உதவியாளரான நேபாளத்தை சேர்ந்த 2 பேரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 7 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

