தருமபுரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப்படையில் இருவரையும் மாவட்ட ஆட்சியாளர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
தருமபுரி மாவட்டம்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சில்லார அள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி. மாணவர்களின் வருமான சான்று, இறப்பு, வாரிசு, கைம்பெண் உதவி தொகை, முதியோர் தொகை விண்ணப்பம், நிலஅளவு என அனைத்திற்கும் ஏற்ப 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகிறார் என சில்லார அள்ளி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
6 ஆயிரம் ரூபாய் லஞ்சம்
இந்நிலையில், பரசுராமன் என்பவர் தனது நிலத்தை அளந்து கொடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலரை கேட்டுள்ளார். அப்போது 6 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, பரசுராமன் 6 ஆயிரம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாத
காலமாக நிலத்தை அளவீடு செய்து தரவில்லை என பரசுராமன் விஏஓ பரசிவத்தை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.
ஆடியோ
அப்போது பேசிய விஏஓ பரமசிவம் உரிய பதிவேடுகள் கிடைக்கவில்லை எனவும் கிடைத்தவுடன் அளவீடு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் பணம் பெற்றுக்கொண்டு ஏன் இன்னும் அளவீடு செய்யவில்லை என்று கேட்டபோது, வேண்டும் என்றால் உனது பணத்தை திருப்பி வாங்கிக்கொள் என கிராம நிர்வாக அலுவலர் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
விசாரணை
இதன் பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த அரூர் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கோட்டாட்சியர் வே.முத்தையன் நடத்திய விசாரணையில் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதனால் சில்லார அள்ளி கிராம நிர்வாக அலுவலர் பரமசிவத்தை தாற்காலியமாக பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் வே. முத்தையன் உத்தரவிட்டார். மேலும், உதவியாளர் ஜெயந்தியை பணியிடை நீக்கம் அல்லது பணியிடை மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.