வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 65 நாட்களே உள்ளதால் தயாராக இருக்கும்படி பாஜக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில், அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று, 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு சம்பந்தமான பல ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
மேலும் இந்த கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்று, தேர்தல் அறிக்கை தயாரிப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
அதனை தொடர்ந்து கமலாலயத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தொகுதி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக தேர்தல் சுற்றுப்பயண தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை செய்யப்பட்ட இந்த கூட்டத்தில், தலைவர்களின் சுற்றுப்பயண ஏற்பாடுகள், திட்ட அறிக்கை தயார் செய்தல் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய பிஎல் சந்தோஷ், ” தேர்தலுக்கு இன்னும் 65 நாட்கள் தான் உள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றாலும் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் தேர்தலுக்கு தயாராக இருங்கள். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் என்று பாஜக தலைவர்கள் அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட உள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும். தொகுதி பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டாம்” என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ”நான் 5 முறை தமிழகத்துக்கு வந்துள்ளேன். நிறைய ஆலோசனை கூட்டங்கள் நடத்திவிட்டேன். ஆனால், யாரும் சொல்வதை செய்வது இல்லை. பேட்டி கொடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறீர்கள். ‘மைக்ரோ லெவல்’ பணிகளை மேற்கொள்ளவில்லை. மேலும், சோசியல் மீடியாவில் மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் திட்டங்களையும், நிதி வழங்குவதையும் பதிவிடுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிவிப்புகளில் உங்களுக்கு தெரிந்த ஒன்றை சொல்லுங்கள் என கேட்க, ஒரு சிலர் மட்டுமே எழுந்து ஒரு சில பட்ஜெட் அறிவிப்பை கூறியுள்ளனர். மற்றவர்கள் அனைவரும் அமைதியாக இருந்ததால், பட்ஜெட் பற்றி கூட தெரியாமல் உள்ளீர்களே என்று பி.எல். சந்தோஷ் விமர்சித்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

