ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்ட தொடக்க விழாவை ரத்து செய்வதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது
ஐபிஎல் 2026 சீசனின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த லீக் போட்டி மார்ச் 28 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
முன்னதாக பெங்களூரு மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக பெங்களூரு மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பின்னர், பல்வேறு விதிமுறைகளுடன் பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று கர்நாடகா அமைச்சரவை அனுமதி அளித்தது. இதன் மூலம் ஆர்சிபி அணி தங்களுடைய ஹோம் போட்டிகளை பெங்களூருவில் விளையாடுவதுடன், ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டி மற்றும் சீசனின் இறுதிப் போட்டியும் பெங்களூரு மைதானத்தில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக எதிவரும் ஐபிஎல் சீசனில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் தொடக்க விழாவை ரத்து செய்வதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய தேவஜித் சைக்கியா, “கடந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் நடந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்த ரசிகர்களின் நினைவாக, இந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் தொடக்க விழா ரத்து செய்யப்படுகிறது. அதற்குப் பதிலாக, பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு இறுதிப் போட்டி நாளன்று ஒரு பெரிய அளவிலான பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

