திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஆரணி அருகே வறுமையில் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியருக்கு வாட்ஸ்அப் குரூப் மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாற்றுத்திறனாளி தம்பதியர்
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி தம்பதியர் குமார்(28) மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி (24) ஆகிய இருவருக்கும் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு வருடமாகிறது. இவர்கள் காதல் திருமணம் செய்துகொண்டதால் இத்திருமணத்தை இவர்களின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் குமாரும் தமிழ்ச்செல்வியும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளி குமார் புதுப்பாளையத்தில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை செய்கிறார். ஆனால் குமாருக்கு அந்த வேலையில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. வீட்டு வாடகை, தினசரி செலவுகள் என அடிப்படை தேவைக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி தற்பொழுது கர்ப்பமானார். இச்சூழ்நிலையில் தமிழ்செல்வியின் வளைகாப்பு குறித்து குமார் மிகுந்த குழப்பத்திலும் வேதனையிலும் இருந்துள்ளார்.
வாட்ஸ்அப் வளைகாப்பு
இவர்களின் வறுமை நிலையை அறிந்த சிலர் அன்னை தெரசா என்ற பெயர் கொண்ட வாட்ஸப் குரூப்பில் பதிவு ஒன்றை தட்டிவிட்டுள்ளனர். அந்த வாட்ஸ்அப் குரூப்பில் இருந்த பலர் இந்த பதிவை கண்டு குமார், தமிழ்செல்வி தம்பதியருக்கு உதவ முன்வந்தனர். அதற்காக நிதி திரட்டி இன்று ஆரணி அடுத்த சந்தவாசல் பகுதியில் ஃபீனிக்ஸ் சிறப்பு பள்ளியில் குமாரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு அன்னை தெரசா வாட்ஸ்அப் குரூப்பை சேர்ந்தவர்கள் மிக சிறப்பாக வளைகாப்பு நடத்தினர்.
மேலும், இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அன்னை தெரசா வாட்ஸ்அப் குரூப்பைச் சேர்ந்த நண்பர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். வளையகாப்பு வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. வந்தவர்களுக்கு மட்டுமின்றி மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளி கணவன் மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் நிதி திரட்டி வளைகாப்பு நடத்திய அன்னை தெரசா வாட்ஸ்அப் குரூப் நண்பர்களை பொதுமக்கள் மிகவும் மனம் மகிழ்ந்து பாராட்டினார்.