தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று, கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடி 11-வது கட்டம், ஆதிச்சனூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறையிடம் கடந்த 2025 ஜூலை மாதம் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டிருந்தன. இம்முன்மொழிவுகள் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற இந்திய தொல்லியல் துறை தலைவரின் கூட்டத்திலும் பரிசீலிக்கப்பட்டன. எனினும், ஒப்புதல் வழங்குவதில் சுமார் 8 மாதங்களாக தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனால் அகழாய்வு பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ள உகந்த காலம் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே இருப்பதாகவும், பருவமழை காரணமாக அதன் பின்னர் களப்பணிகள் பாதிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தார். மேலும், தொல்லியல் அகழாய்விற்கு ஒதுக்கப்பட்ட 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதி வீணாகும் அபாயமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். தமிழ் நாகரிகத்தின் தொன்மை இந்திய நாகரிகப் பண்பாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும், ஆகையால் அகழ்வாராய்ச்சிக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொல்லியல் துறையின் கோரிக்கையை ஏற்று மத்திய தொல்லியல் துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது. சிவகங்கை கீழடி 11-வது கட்டம், தூத்துக்குடி பட்டிணமருதூர், தென்காசி கரிவலம், வந்தநல்லூர், கடலூர் மணிகொல்லை, விழுப்புரம் ஆதிச்சனூர், கோவை வெள்ளலூர், சேலம் தெலுங்கனூர்-மங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் தொல்லியல் ஆய்வை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. அடுத்து, வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணரும் அகழ்வாராய்ச்சிகள் மேலும் விரிவடைவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தாகவும், இந்த அனுமதி ஆய்வுகளை வேகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே 5 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில், புதிய 8 இடங்களையும் சேர்த்து, மாநிலத்தில் மொத்தம் 13 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

