அரசியல்இந்தியாசமூகம்

இணைப்பு மொழியாகிறதா இந்தி ? மறைமுகமாக காய்நகர்த்தும் மத்திய அரசு!

இணைப்பு மொழியாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் ‘இ – மெயில்’ வழி தகவல் தொடர்புகள் அனைத்தையும் இந்தியில் மேற்கொள்ளும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தி தெரியாது போடா !

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து  வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.

அவரின் வந்த பேச்சு தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமித்ஷா கருத்திற்கு கண்டனம் தெரிவித்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் “இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்” என்று தன் சமூக வளையதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து #இந்தி_ தெரியாது_ போடா_ என்ற ஹேஷ்டேக் இந்தியா முழுவதும் பிரபலமாகத் தொடங்கியது.

மத்திய அரசின் அதிரடி முடிவு

இந்தியை இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த போதும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் குறிப்புகளும், ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகளும் இந்தி மொழியில் தான் இருந்து வருகிறது.

தற்போது இந்தி திணிப்பின் அடுத்தகட்ட நகர்வாக, அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் இ – மெயில் வழி கடிதங்கள், தகவல் தொடர்புகள் அனைத்தும் இந்தி மொழில் தான் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு இந்திய மக்களிடையே, குறிப்பாக தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
.

Related posts