’டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநரான அட்லீ அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) எனும் திரைப்படத்தில் ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சரவணன், தேனி முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பாளராக K. சுரேஷ்குமார் பணியாற்றியுள்ள நிலையில், கலை இயக்கத்தை ராஜ் கமல் செய்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லரில் கதையின் நாயகனான அபிஷன் ஜீவிந்த், முதல் காட்சியில் பள்ளி வகுப்பறையில் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது பாடத்தை கவனிக்காமல் தனது காதலி குறித்து கற்பனை செய்து கொண்டிருப்பார். அப்போது ஆசிரியர் அவரை என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என கேள்வி எழுப்பும் போது கனவில் இருந்து நிஜ வாழ்க்கைக்கு வருவார்.
இதனையடுத்து அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் இருவரும் சேர்ந்து தனது நண்பர்களான காதல் ஜோடியை சேர்த்து வைப்பது குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த பயணத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததா? அல்லது தங்களது நண்பர்களின் காதலை சேர்த்து வைப்பதில் வெற்றி பெற்றார்களா? என்பதே கதைக்கருவாக இருக்கலாம் என்பது டிரெய்லரின் மூலம் தெரிகிறது.
பயணம் தொடர்பான காட்சிகள், வசனங்கள், பின்னணி இசை என அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர், பாடல்கள் ஆகியவை வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் கவரப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க செய்துள்ளது. வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினர். அந்த வரிசையில் பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் அபிஷன் ஜீவிந்த் போன்ற பிரபல இயக்குநர்களும் தற்போது கதாநாயகனாக நடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

