இன்று ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீட்டிற்குள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக இருப்பது பிள்ளைகளின் கல்வி தடைபட்டுவிட்டதே என்பதுதான்.
ஆனால் ஆசிரியர்கள் மனது வைத்தால் தொழில்நுட்பத்தின் வாயிலாக ஆன்லைனில் தங்களது வகுப்பறையை நடத்திட முடியும்.
ஆம், பெற்றோர்கள் இந்த வசதியினை கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த கட்டுரையில் Google Class Room அப்ளிகேஷன் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை தான் உங்களுக்கு கொடுக்கப்போகிறேன். நீங்கள் இந்த அறிமுகத்தோடு உள்ளே சென்றால் உங்களால் பிற விசயங்களையும் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும்.
மேலெழுந்தவாரியாக இந்த பெயரை கேட்போர் ஆசிரியர் நேரடியாக இதில் வீடியோ வடிவில் பாடம் நடத்துவார். மாணவர்கள் பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வார்கள்.[Google Meet, Google Hangout போன்றவை அதற்கு இருக்கின்றன].
ஆனால் உண்மையில் கூகுள் கிளாஸ்ரூம் அதுவல்ல. கூகுள் கிளாஸ்ரூம் ஆனது ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரையாடலில் ஈடுபடவும் வீட்டுப்பாடங்களை [assignment] வழங்கிடவும் அதை திருத்தி அது பற்றிய தகவல்களை மாணவர்களுக்கு வழங்கிடவும் பல்வேறு ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.
உதாரணத்திற்கு ஆசிரியர் ஒரு பாடம் குறித்து வகுப்பு நடத்துகிறார் என வைத்துக்கொள்வோம்.
அதனை அவர் யூடியூப் மூலமாக பதிவேற்றம் செய்து வெளியிடலாம் அல்லது Google Meet, Google Hangout போன்ற ஆப்களை பயன்படுத்தி நேரடியாகவே நடத்தலாம். அப்படி நடத்திய வீடியோவை ஆசிரியரால் Google Classroom இல் மாணவர்களுக்கு பகிர முடியும்.
மேலும் அந்த பாடத்திட்டம் குறித்து அவர் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கலாம், ஒரு ஆன்லைன் தேர்வை நடத்தலாம். அவர்களுக்கு அதை திருத்தி அந்த தகவலையும் அங்கேயே கொடுக்கலாம்.