அரசுப் பள்ளியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் உள்ள கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய உதவிப்பொறியாளரும், தேர்தல் பறக்கும் படை அதிகாரியுமான சங்கர சுப்பிரமணியன் தலைமையில் தேர்தல் பறக்கும் படைக் குழுவினர் பள்ளிக்கு விரைந்துச் சென்றனர். பின்னர் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயக்குமாரை வரவழைத்து, பள்ளியைத் திறந்து தொகுதியின் தேர்தல் உதவி அதிகாரியும், கோவில்பட்டி வட்டாட்சியருமான அப்பணராஜ் முன்னிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடித்தது. சில வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு சாவிகள் இல்லை என்பதால் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த தகவல் காட்டுத் தீயாக பரவியதால் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்டக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பள்ளியை முற்றுக்கையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளி வகுப்பறை சாவிகள் எங்கே போனது? சிசிடிவி கேமராக்கள் ஆய்வுச் செய்யாதது ஏன்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சோதனை நிறைவடைந்து, தேர்தல் உதவி அதிகாரியும் கோவில்பட்டி வட்டாட்சியருமான அப்பணராஜ் வெளியே வந்தபோது, பள்ளியில் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? எதற்காக சோதனை நடந்தது? என்று செய்தியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கேள்வியெழுப்பினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்று கூறிவிட்டு அவர் காரில் ஏற முயன்றார்.
அப்போது அங்கிருந்த அரசியல் கட்சியினர், காரை சுற்றி வளைத்து பணம் அல்லது பொருட்கள் ஏதும் இருந்ததா? இல்லையா? என்பது குறித்து கூறுங்கள் என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர் பதில் எதுவும் கூறாமல் மௌனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர், அவரது காரை செல்ல விடாமல் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து முறையாக தகவல் தெரிவிக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

