ஆந்திர மாநிலம் மார்காபுரத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பாமூரு நோக்கி தனியார் சுற்றுலா ஆம்னி பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் ஆந்திர மாநிலம் மார்காபுரம் மாவட்டத்தின் ராயவரம் பகுதி அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியது.
லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டுமே தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் பேருந்துக்குள் சிக்கிக்கொண்ட பயணிகளில் 14 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பலர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் உடனடியாக விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மார்காபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 14 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையின்படி, அதிவேகமாக எதிரே வந்த டிப்பர் லாரி பேருந்தின் மீது மோதியதே விபத்துக்கு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் முன்பகுதியில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேறியதால் 10 பேர் உயிர் தப்பியதாகவும், பின்பகுதியில் அமர்ந்திருந்த பயணிகள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பேருந்தில் பயணித்தவர்கள் கனிகிரி பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், மார்காபுரம் சட்டமன்ற உறுப்பினர் கண்டூல நாராயண ரெட்டி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

