கேரளாவை சேர்ந்த விஸ்மயா என்ற இளம்பெண் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்ததை தொடர்ந்து. இவரது உயிரிழப்பிற்கு கணவர் கிரண் குமார் தான் காரணம் என 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது கொல்லம் கூடுதல் நீதிமன்றம்.
திருமணம்
கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த விஸ்மயா, ஆயுர்வேத மருத்துவம் இறுதி ஆண்டு படித்து வந்திருக்கிறார். விஸ்மயா அதே மாவட்டம் சாஸ்தம்நாடு பகுதியை சேர்ந்த கிரண்குமார் என்ற நபரை கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துள்ளார். விஸ்மயாவின் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டதால் 100 சவரன் நகை, 1 ஏக்கர் நிலம், 1 டொயோட்டா கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
வரதட்சணை கொடுமை
விஸ்மயாவோடு நன்றாக வாழ்ந்து வந்த கிரண் குமார் அடிக்கடி மேலும் வரதட்சணை கேட்டு விஸ்மயாவை துன்புறுத்தியுள்ளார். கிரண்- விஸ்மயா இருவரும் விஸ்மயாவின் வீட்டிற்கு சென்றிருந்தபோது கிரண் அங்கேயும் குடித்துவிட்டு விஸ்மயாவை தாக்கியுள்ளார். இதனால் விஸ்மயாவின் வீட்டார் கிரண் மீது புகாரளித்துள்ளனர். பின்னர் இரு வீட்டாரும் சமரசம் பேசி கிரண் விடுதலையானார். விஸ்மயாவோ கணவர் வீட்டுக்கு செல்லாமல் பிறந்த வீட்டிலேயே இருந்து விட்டார்.
விஸ்மயாவின் மரணம்
கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற விஸ்மயாவை கணவர் கிரண் சென்று சந்தித்து தனது வீட்டுக்கு திரும்பவும் அழைத்து சென்றுள்ளார். 1 வாரம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்திருக்கிறது. பின்னர், மீண்டும் கிரண் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். இதனால் மனமுடைந்த விஸ்மயா பெற்றோரிடம் எதையும் கூறாமல் மறைத்திருக்கிறார். உச்சக்கட்ட வரதட்சணை கொடுமைக்கு ஆளான விஸ்மயா கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்தார்.
10 ஆண்டு சிறை
விஸ்மயாவின் மரணத்திற்கு கணவர் கிரண் தான் காரணம் என விஸ்மயாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் கிரண்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று ஓராண்டுக்கு பிறகு கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயாவின் மரணத்தில் கணவர் கிரண்தான் முக்கிய குற்றவாளி என தீர்ப்பளித்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.