முறைகேடு புகாரில் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டும் ஏன் இதுவரை அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களை முறைகேடாக நியமனம் செய்ததில் சுமார் 1,020 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் கே.என் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யும்படியும் 2025 ஜூலை மாதம் டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
அந்த கடிதத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரியும் அதிமுக எம்.பி. இன்பதுரை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை அனுப்பியது புகார் கடிதம் மட்டுமல்ல, சோதனையின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களை வழங்கியிருப்பதால் அதன் அடிப்படையில் உடனடியாக வழக்குப்பதிவு செய்யும்படி பிப்ரவரி 20-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
ஆனால், ‘நீதிமன்றம் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. மாநில அரசு மற்றும் அமைச்சர் நேருவுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுகிறது. அதனால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்னும் எண்ணிடப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இன்பதுரை தரப்பில், “நீதிமன்றம் பிப்ரவரி 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் வழக்கு பதிவு செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு இதுவரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை. ஆனாலும், வழக்கு பதிவு செய்யாமல் லஞ்ச ஒழிப்புத்துறை காலதாமதம் செய்து வருகிறது” என வாதிடப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், “தேர்தல் காரணமாக அதிகாரிகளிடம் அனுமதி பெற முடியவில்லை. அரசிடம் அனுமதி வாங்கிய பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை? அரசு தரப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, ஏன் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை? மறு ஆய்வு மனு தாக்கல் செய்ததற்காக விசாரணை நடத்தாமல் இருக்க முடியுமா? என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை ஏப்ரல் 20 -ம் தேதி ஒத்திவைத்தனர்.

