திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி வந்துள்ளார்.
“திமுக எங்களை புறக்கணித்துவிட்டது” என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக தேர்தல் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2 இடங்களும், மதிமுகவிற்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளில், இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 43 இடங்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளன. விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக இன்னும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் உள்ளது.
இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக திமுக இதுவரை எந்தவித உடன்பாடுக்கும் வராமல் இருந்துள்ளது.
இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “திமுக எங்களை புறக்கணித்துள்ளது. என்னை திட்டமிட்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற முயற்சி நடந்தது. தமிழர்கள் அல்லாத அதிகாரிகளின் பேச்சை கேட்டு திமுக எங்களை புறக்கணித்துள்ளது. சட்டமன்றத்துக்கு உள்ளேயேயும் வெளியேயும் நாங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை திமுக அரசு செவி சாய்க்கவில்லை.
விரல்விட்டு எண்ணக்கூடிய சில அதிகாரிகளின் பிடியில் தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. நாங்கள் திமுக அரசுக்கு குடைச்சலாக இருப்போம் என சில அதிகாரிகள் தவறான தகவல் கொடுத்துள்ளனர். நாங்கள் இரண்டு தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக எங்களுக்கு ஒரு தொகுதியை மட்டுமே கொடுக்க முன்வந்தது. எனவே திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறது” என்று கூறியிருக்கிறார்.

