சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டுமே முடியும் என தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பனையூர் வந்த தவெக தலைவர் விஜயை பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து பனையூர் அலுவலகத்தில் தவெகவின் கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் தவெக கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது பாடகர் வேல்முருகனின் இசை கச்சேரியில் விஜய் உற்சாகமாக நடனமாடினார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விசில் அடித்து கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களா என மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர். எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது சட்டசபையில் கேலி செய்தனர். எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்த பின் அரசியல் பழம் மிக அதிக அனுபவம் கொண்டவர்களுக்கு கூட கோட்டையை பிடிப்பது என்பது கனவாகவே இருந்தது. அவர்கள் துருப்பிடித்த வியூகத்தை கையில் எடுத்துள்ளனர். பவளவிழா பாப்பாவிற்கு வேறு என்ன தெரியும், பழைய டப்பாவை உருட்ட தானே தெரியும். அதற்காக நாம் அவர்கள் செய்த தவறை வெளியே சொல்லாமல் இருக்க முடியுமா?
திருவள்ளுவர் மட்டும் இன்று இருந்திருந்தால் திமுகவை பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார் தெரியுமா? கற்பனையாக தான் சொல்கிறேன். அது என்னவென்றால் அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என்றார்.
சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டுமே முடியும். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் விட மாட்டீர்கள் என அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்த விஜய் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது கருத்துக்கணிப்பு அல்ல கடுப்புக்கணிப்பு என்றும் தெரிவித்தார்.

