இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் சன்னி லியோன் மற்றும் ராகுல் பட் நடித்தப் படம் ‘கென்னடி’. தூக்கமில்லாமல் தவிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி, தனது வாழ்க்கையின் மீட்பைத் தேடி அலையும் ஒரு த்ரில்லர் கதையே ‘கென்னடி’. இந்தப் படத்தை குட் பேட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘உதய் ஷெட்டி’ என்ற முன்னாள் போலீஸ் அதிகாரியாக ராகுல் பட் நடித்துள்ளார். உலகம் அவர் இறந்துவிட்டதாக நினைக்க, ஆனால் அவர் ‘கென்னடி’ என்ற பெயரில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். ஊழல் நிறைந்த போலீஸ் அதிகாரிகளுக்காக ரகசியமாக கொலைகள் செய்யும் நபராக ஆக அவர் இருக்கிறார். அப்படியான நிலையில் கென்னடியின் வாழ்க்கையில் சார்லி என்கிற சன்னி லியோன் குறுக்கிடும்போது கதை பல திருப்பங்களைச் சந்திக்கிறது.
2014-ல் தொடங்கி கொரோனா பெருந்தொற்று காலம் வரையிலான ஒரு காலக்கட்டத்திலான மும்பையின் இருண்ட பக்கங்களை இந்தப் படம் காட்டுகிறது. Neo-noir வகை த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கான பின்னணி இசை, ஐரோப்பாவின் செக் குடியரசு நாட்டில் உள்ள புகழ்பெற்ற ‘ப்ராக் பில்ஹார்மோனிக் கொயர்’ குழு அமைத்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டே தயாராகிவிட்ட இந்தப் படம், அதே ஆண்டு பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அங்குள்ள ரசிகர்கள் எழுந்து நின்று சுமார் 7 நிமிடங்கள் கைதட்டிப் பாராட்டினர். இது உலக அரங்கில் படத்திற்குப் பெரிய மரியாதையைத் தேடித்தந்தது.
தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி திரைப்பட விழாவிலும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதேபோல், இந்தியாவிலும் முதன்முதலில் மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. எனினும், இந்தப் படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இந்தியாவில் தியேட்டர்களில் வெளியாகவில்லை.
தாமதத்திற்கான காரணம் பற்றி பேசிய அனுராக் காய்ஷாப், “இந்தப் படத்தைத் தயாரித்த நிறுவனத்தில் ஏற்பட்ட பெரிய நிர்வாக மாற்றங்களே தாமதத்திற்கு முக்கியக் காரணம். படத்தை உருவாக்க ஆர்வமாக இருந்த அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறிய பிறகு, புதிய அதிகாரிகளுக்கு இந்தப் படத்தின் மீது பெரிய ஈடுபாடு இல்லை. தற்போதைய சினிமா சந்தையில் படைப்பாற்றலை விட, போட்ட பணத்தை எடுப்பது மற்றும் லாபம் சம்பாதிப்பதிலேயே நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. ‘கென்னடி’ போன்ற கலைநயம் மிக்க படங்கள் திரையரங்குகளில் ஓடுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்ததால், வெளியீடு தள்ளிப்போனது.
இந்தியாவில் பெரிய நட்சத்திரங்கள் இல்லாத, மாற்றுச் சிந்தனை கொண்ட படங்கள் திரையரங்குகளைக் கிடைப்பதிலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விளம்பரச் செலவுகளைச் செய்வதிலும் பெரும் சவால்கள் உள்ளன. இந்தப் படம் ஏற்கனவே தணிக்கை குழுவின் அனுமதியைப் பெற்றுவிட்டாலும், நிதிச் சிக்கல்கள் மற்றும் கொள்கை முடிவுகளால் முடங்கிப் போனது. இந்தத் தாமதங்களால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒருகட்டத்தில் இந்தப் படத்தைப் பற்றிய கவலையையே விட்டுவிட்டேன்.” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
இதற்கிடையே, நல்ல செய்தியாக தற்போது இத்திரைப்படம் அடுத்த ஓரிரு மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகப் பார்க்கக் கிடைக்கிறது. தகவல்களின்படி, இந்தப் படம் திரையரங்குகளுக்குப் பதிலாக நேரடியாக OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

