அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங், அந்த அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக இந்திய அணி சொந்த மண்ணில் கோப்பையை வென்றதுடன், அடுத்தடுத்து சாம்பியன் பட்டங்களை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் பெற்றது.
அதேசமயம் இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணியானது பால் ஸ்டிர்லிங் தலைமையில் களமிறங்கியது. ஆனாலும் அந்த அணி விளையாடிய 4 போட்டிகளில் ஒரு வெற்றி, இரண்டு தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என மொத்தமாக 3 புள்ளிகளை மட்டுமே எடுத்திருந்த காரணத்தால் லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது.
அதுலும் குறிப்பாக அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் இத்தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், காயம் காரணமாக தொடரின் பாதியிலேயே வெளியேறியதும் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் அவர் அயர்லாந்து டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுய்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு அயர்லாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் முழுநேர கேப்டனாக பால் ஸ்டிர்லிங் பொறுப்பேற்றிருந்தார். இதில் அவர் மொத்தம் 48 சர்வதேச டி20 சர்வதேச போட்டிகளில் அயர்லாந்து அணியை வழிநடத்திய நிலையில், அதில் 20 போட்டிகளில் வெற்றியையும், 27 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளார்.
இந்த நிலையில் தான், 2028ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான புதிய திட்டமிடலின் ஒரு பகுதியாவே டி20 அணியின் கேப்டன் முடிவிலிருந்து விலகுவதாகவும், அயர்லாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடிக்க விரும்புவதாகவும் பால் ஸ்டிர்லிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்டிர்லிங், “சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணியை வழிநடத்தியது எனக்குக் கிடைத்த மிகப்பெரும் கௌரவமாகும். அதனை நினைத்து நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். அணியின் கேப்டனாக இருந்த சமயத்தில் எனக்கு நம்பிக்கை மற்றும் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
எனது சக வீரர்கள், பயிற்சி ஊழியர்கள், இதர ஆதரவு ஊழியர்கள் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் அனைவருக்கும், அவர்கள் எனக்கு அளித்த ஆதரவிற்காக நன்றி கூற விரும்புகிறேன். நாங்கள் எங்கு விளையாடினாலும் இந்த அணியைத் தொடர்ந்து ஆதரிக்கும் ரசிகர்களின் அன்பிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
மேலும் நான் தற்சமயம் டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், அயர்லாந்து அணிக்குத் தொடர்ந்து முழுமையாகப் பங்களிப்பேன். அதேபோல், ஒருநாள் போட்டிகளில் அயர்லாந்து அணியின் கேப்டனாக எனது பொறுப்பைத் தொடர்ந்து மேற்கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து அணிக்காக இதுவரை 163 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டிர்லிங் ஒரு சதம், 24 அரைசதங்கள் என 3,895 ரன்களை குவித்துள்ளார். தற்சமயம் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளதால், ஜூன் மாதம் நடைபெற இருக்கும் இந்தியாவிற்கு எதிரான டி20 தொடருக்கு முன் அந்த அணி புதிய கேப்டனை அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

