பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ‘துரந்தர் 2’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த துரந்தர் திரைப்படம் முதல் ஓரிரு நாட்களில் சுமாரான வசூலையே பெற்றது. ஆனால் அதன் பின்னர் படத்திற்கு கிடைத்த பாசிடிவான விமர்சனங்களால் ரசிகர்கள் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க தொடங்கினர்.
ஸ்பை ஆக்சன் த்ரில்லர், புதுவிதமான கதைக்களம் மற்றும் கேரக்டர்கள் என ஏராளமான சுவாரசியங்களுடன் துரந்தர் படம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. படத்தின் நீளம் 3.30 நிமிடங்கள் இருந்தாலும் எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாமல் படத்தின் திரைக்கதையை இயக்குனர் ஆதித்யா தார் அமைத்திருந்தார்.
இதனால் இந்த படம் உலக அளவில் சுமார் 1300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படத்துடைய 2 ஆம் பாகமான ‘துரந்தர் ரிவெஞ்ச்’ வெளியாகியுள்ளது.
உண்மை சம்பவங்களை தழுவி இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஆதித்யா தார் உருவாக்கியுள்ளார். படத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஊரி தாக்குதல் உள்ளிட்ட முக்கிய சம்பவங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதற்கிடையே தான் ‘துரந்தர் ரிவெஞ்ச்’ படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகியிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்பே ரூ.30 கோடியை தாண்டி வசூலித்ததாக சொல்லப்பட்ட இப்படம், தற்போது முதல் நாளில் பல படங்களின் வசூலை விஞ்சியுள்ளது.
அதன்படி, முதல் நாளில் 103 கோடி ரூபாய் வரை தியேட்டரில் வசூல் செய்துள்ளது. இது இந்திய அளவிலான வசூல் மட்டுமே. இதுதவிர பட ரிலீஸுக்கு முதல் நாள் சிறப்பு காட்சி திரையிடல் மூலமாக ரூ. 43 கோடி வசூலித்தது எனவும், முதல் நாளில் மொத்தமாக நிகர வசூல் சுமார் ரூ. 172.63 கோடி என ‘சாக்னில்க்’ இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் படக்குழு அதிகாரபூர்வமாக இன்னும் வசூல் விவரங்களை வெளியிடவில்லை. ரூ. 172.63 கோடி வசூல் உறுதி என்னும் பட்சத்தில் புஷ்பா மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களுக்கு பிறகு முதல் நாளில் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக ‘துரந்தர் ரிவெஞ்ச்’ அமையும்.

