நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசி சர்ச்சையான நிலையில், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக தவெக தேர்தல் மேலாண்மை பிரிவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “தொடர்ந்து களப்பணியாற்றுங்கள். வெற்றி ஒன்றையே இலக்காகக் கொள்வோம். அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் மிக முக்கியமானது. விசில் சின்னத்தை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
எதிர்க்கட்சியினர் யாராவது நம்மை தாக்கினால், நீங்கள் யாரும் திருப்பி அடிக்க வேண்டாம். அடி வாங்கி கொள்ளுங்கள். நம்மை அடிக்க அடிக்க அதுதான் நமக்கு பலமாக மாறும். எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை நாம் சட்டரீதியாக சந்திப்போம். வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு களப்பணி ஆற்றுங்கள்.
எங்களது பாசத்திற்குரிய ரஜினி சார் அவர்களே, எங்களுடைய தலைவருக்கும் நீங்கள் தான் தலைவர். எங்களுடைய தலைவருடைய நிலைப்பாடு தான் எங்கள் நிலைப்பாடும். தூத்துக்குடி சிறுமி உயிரிழப்பை மறைப்பதற்காகவும், திசைத் திருப்புவதற்காகவும் இந்த பிரச்சாரம். பாசத்திற்குரிய ரஜினி சார் அவர்களுக்கு நான் பதிவுச் செய்யக் கூடியது நான் கூறியது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் என்னுடைய வருத்தத்தையும், என்னுடைய மன்னிப்பையும் பகிரங்கமாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால் வயதில் அவர் மூத்தவர். அவரது அறிக்கையை படித்தேன். அவருக்கு ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அந்த உணர்வுக்கு நான் மரியாதைக் கொடுக்கிறேன்” என தெரிவித்தார்.

