தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
சென்னை மாவட்டம், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஆதவ் அர்ஜுனா,தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும். முதலமைச்சர் பதவிக்காக ஒரு போதும் டெல்லிக்கு அடிபணிய மாட்டோம். சில கட்சிகள் கூட்டணிக்காக 90 சட்டமன்றத் தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி உள்ளிட்ட பல ஆஃபர்களை வழங்க முன் வந்தன. ஆனால், அதை அனைத்தையும் தூக்கி எறிந்தவர் தவெக தலைவர் விஜய்.
அரசியல் சலுகைகளுக்கு பதிலாக மக்கள் ஆதரவை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்க தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். முக்கிய கட்சிகள் கூட்டணிகளுடன் களமிறங்கும் சூழலில், தவெக தனித்துப் போட்டியிடும் முடிவு வாக்குச் சிதறலுக்கும் புதிய அரசியல் சமநிலைக்கும் வழி வகுக்கும்” என தெரிவித்தார்.

