தமிழ்நாட்டு மக்கள் இலவசங்களை புறக்கணிக்காவிட்டால், அவை வரியாக மக்கள் தலையில் சுமத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா எச்சரித்துள்ளார்.
கும்பகோணத்தில், மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 43-வது மாநில மாநாடு, வரும் மே மாதம் 5-ஆம் தேதி திருவாரூரில் நடைபெறுகிறது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். தற்போது உள்ளூர் வணிகத்தை ஆன்லைன் வர்த்தகம் 35 சதவீதம் பறித்துக் கொண்டுள்ளது. இதில் இருந்து உள்ளூர் வணிகத்தை பாதுகாத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் விழிப்புணர்வு மற்றும் எழுச்சி மாநாடு நடத்தப்படுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பதித்து ஒட்டுமொத்தமாக உள்ளூர் வணிகத்தை துடைத்தெறியும் சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். 3 மாதங்களுக்கு முன்பு பேரமைப்பு சார்பில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து முறையிட்டு, உணவு பாதுகாப்பு குறித்த உரிமத்தை ஆயுள் கால உரிமமாக மாற்றி வழங்கிட மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்படி ஆயுள் கால உரிமம் வழங்குவதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. ரூ.1.5 கோடிக்குள் வணிகம் செய்யும் வணிகர்கள் இத்தகைய உரிமம் பெற தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இதேபோன்று தமிழக அரசு, தனது உரிமங்களை ஒற்றைச் சாளர முறையில் ஆயுட்கால உரிமங்களாக மாற்றி வழங்கிட முன்வர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழக மக்கள் இலவசங்களை புறக்கணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்போதுதான் நாட்டின் கடன் சுமை குறையும். இலவசத்திற்கு மக்கள் விடை கொடுக்காவிட்டால், பணம் வாங்குவதை புறம் தள்ளாவிட்டால், அவை வரியாக உங்கள் தலையில்தான் சுமத்தப்படும் என தமிழக வாக்காளர்களை எச்சரிக்கிறேன். ஆன்லைன் வர்த்தகத்தை உரிய சட்டத் திருத்தங்களை ஏற்படுத்தி ஒழுங்கு படுத்தாவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் 10 லட்சம் வணிகர்கள் காணாமல் போவார்கள்” என தெரிவித்தார்.

